பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

233

தேவந்தி மீண்டும் பேசினாள். "உன் கணவருக்கு உன்மீது வெறுப்புக்கிடையாது. உன் முன் பிறப்பில் நீ ஒரு நோன்புறுதியை மீறியிருக்கிறாய். ஆனால் அப்பழவினையின் தீயபயனை அகற்ற வழி இல்லாமலில்லை. காவிரியின் கடல்முகத்தில் கதிரவனுக்கும் தண்மதிக்கும் உரிய தெய்விக ஆற்றலுடைய இரு குளங்கள் உள்ளன. அவற்றில் குளித்துக் காதற் கடவுளுக்குக் கோயில் வழி பாடாற்றுவாயானால் தீவினை நீங்கும் என்னுடன் வந்து ஒருநாள் அவற்றில் குளிப்பாயாக,” என்று அவள் கூறினாள்.

அங்ஙனம் நான் செய்வது தகுதியன்று என்று கண்ணகி மறுத்தாள். இச்சமயம் பணிப்பெண் ஒருத்தி வந்து கோவலன் மனையகம் வந்துவிட்டான் என்று தெரிவித்தாள். கண்ணகி உடனே கணவனைக் காண விரைந்தாள். கோவலன் படுக்கை யறையில் புகுந்து மனைவியைத் தன் அருகே இழுத்தணைத்து, துயரால் மெலிந்த உடலையும் வாடிய முகத்தையும் கூர்ந்து நோக்கினான்.

"நானே என் நிலைபற்றி வெட்கமடைகிறேன். என் பெற்றோர்கள் எனக்களித்த செல்வமுழுவதையும் வஞ்ச மனங் கொண்ட ஓர் ஆடல் நங்கையினிடமாக வீண்செலவு செய்து அழித்துவிட்டேன்,” என்றான்.

கண்ணகி புன்முறுவல் பூத்தாள். "இதோ என்னிடம் இரண்டு சிலம்புகள் உள்ளனவே; எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்,” என்றாள். அவன் அமைந்து விடையளித்தான். "கண்மணி, நான் சொல்வதைக் கேள். இவற்றை முதலீடாகக் கொண்டு வாணிகம் செய்து, இழந்த செல்வத்தைக் மீட்க எண்ணுகிறேன். அது காரணமாகப் புகழ்வாய்ந்த மதுரை செல்ல விரும்புகிறேன்.நீயும் என்னுடன் வா,” என்றான்.

கணவன் ஆடல்நங்கையைத் துறந்து தன்னிடமே மீண்டும் வந்ததுகண்ட கண்ணகி கரையற்ற மகிழ்ச்சி கொண்டாள். உலகின் எந்தக்கோடிக்காயினும் அவனுடன் செல்ல அவள் தயங்கவில்லை."

பணியாட்கள் எவரும் அறியாமல் விடிய நெடுநேரத்துக்கு முன்பே கணவனும் மனைவியும் தங்கள் வீட்டை விட்டுப் புறப் பட்டனர். இரவின் அமைதியிடையே அவர்கள் புறவாயிலின்