பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(244) ||

அப்பாத்துரையம் - 26

கண்ணகி கோவலன் போன்ற மேன்மக்களை விருந்தினராகக் காள்வதில் மாதரி உண்மையிலேயே மிகவும் பெருமை கொண்டாள். அவர்களுக்காக அவள் ஒரு வனப்பு வாய்ந்த சிறு குடிசையைத் துப்புரவு செய்து கொடுத்தாள். அதற்கு நாற்புறமும் வேலியிட்டிருந்தது. அதன் சுவர்கள் செங்காவியால் தீட்டப் பட்டிருந்தன. அவள் கண்ணகி நீராடவும் ஆடைகள் மாற்றவும், தக்க துணை தந்தபின், தன் புதல்வி ஐயையை அவளுக்கு அறிமுகம் செய்துவைத்தாள்.“அழகுமிக்க நங்கையே! என் புதல்வி ஐயை உன் தோழியாய் இருப்பாள். என் இல்லத்தில் நீயும் உன் கணவனும் தங்கியிருக்கும் வரை, உங்களுக்கு யாதொரு குறையும் இல்லாமல் காப்போம்!" என்று அவள் கண்ணகியிடம் கூறினாள்.

மறுநாள் காலையில் மாதரி கண்ணகிக்கு உணவு சமைப் பதற்குரிய புதிய கலங்கள் வழங்கினாள். நேர்த்தியான செந்நெல் அரிசியும், பிஞ்சுமாவு, மாதுளை, கதலி முதலிய காய்கறி வகைகளும், தன் ஆவினத்திலிருந்து புதிது கறந்த நறும்பாலும் தந்தாள்.

கண்ணகி உடனடியாகக் காலை உண்டி சமைக்கத் தொடங்கினாள். காய்கறிகளை அவள் ஆய்ந்தரிந்தாள். ஐயை அவளுக்கு அடுப்புமூட்ட உதவி செய்தாள். தன்னாலியன்ற வரையும் கவனிப்புடனே அவள் சோறும் கறியும் சமைத்தாள். ஆனால் அடுப்பின் வெப்பத்துக்கெதிராக இருந்த காரணத்தால் அவள் கண்கள் சிவந்தன. வியர்வை முகமெங்கும் ஆறாய் ஓடிற்று. சமையல் முடிந்ததும் அவள் கணவனை உணவு உட்கொள்ளும் படி அழைத்தாள்.

உலர்ந்த புல்லால் முடையப்பெற்ற சின்னஞ் சிறு பாயிட்டு அதில் அவனை அமர்வித்தாள். கைகாலலம்பி அவன் பாயில் அமர்ந்தபின், அவள் அவன் அமர்ந்த இடத்தின் முன்புறமெங்கும் நீர் தெளித்து மெழுகி, தூய அந் நிலத்தில் வாழையின் இளந் தளிரிலை பரப்பி அதில் அமுது படைத்தாள்.

வணிகக் குடிப்பிறந்தார்க்கு விரித்துள்ள முறையிலே வழக்கமான வணக்கம் வழிபாடுகளை ஆற்றியபின், கோவலன் தன்முன் வைக்கப்பட்ட உணவை உட்கொண்டான். உண்டு களையாறித் தனியேயிருந்தபின், கண்ணகி அவனுக்கு வெற்றிலை யும் பாக்கும் அளித்து உண்பித்தாள்.