பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

285

அரசனும் அரசியும் மானையும், மலையாட்டையும் தம் அருகே வரும்படி அழைத்தனர். அவர்கள் அருகே சென்ற போது காடையும் முயலும் செடிகொடிகளில் விழுந்தடித்து ஓடின. அவற்றின் அச்சத்தை அரசன் அரசிக்குச் சுட்டிக் காட்டினான். அவர்கள் செய்குன்றுகளில் ஏறி அதிலுள்ள செயற்கை அருவி களைப் பார்வையிட்டனர். குளிர்ச்சிபொருந்திய முழைஞ்சுகள், புத்தார்வம் தூண்டும் நீரூற்றுக்கள் ஆகியவற்றினூடாக மெல்லென வீசும் இன்மணமிக்க தென்றலைப் பருகியவாறு பூங்காவின் பின்னல் வளைவுகளினிடையே அவர்கள் உலவினார்கள்.

உலாவினால் களைப்புற்று அரசகுழாத்தினர் அரண்மனை நோக்கித் திரும்பிவந்தனர். அரசன் அரசிருக்கை மண்டபத்தை அடைந்தான். சிறைக்காவலர் வந்து திருமுன் காட்சிக்குக் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதைக் காவலர் தெரிவித்தனர். அவர்களை அரசன் வந்து காணும்படி பணித்தான். அவர்கள் வந்து தொலைவில் நின்று தாழ்ந்து தலைவணங்கியவாறு செய்தி தெரிவித்தனர்.

“வலிமைமிக்க மன்னன் மாவண்கிள்ளியே! நீடு வாழ்வீராக! காரியாற்றுப்போரில் தம் புதல்வன் தலைமையில் பாண்டியர் சேரர்படைகளை முறியடித்த தானைக்குரிய தகைசால் அரசே! இந்நகரில் அலைந்து திரிந்து வருகிற ஒரு நங்கை தற்போது சிறைக்கூடத்துக்கு வந்து, ஒரே ஒரு கலத்திலிருந்து உணவெடுத்து எண்ணற்ற மக்களுக்கு ஊட்டி வருகிறாள்! இதை அறிவீராக! தம் சீர்சால் ஆட்சி நின்று நீடுக!” என்றனர்.

அத்தகைய நங்கையைக் காணூம் ஆர்வம் அரசனுக்கு ஏற்பட்டது. “அவளை மகிழ்வுடன் காண்பேன்." என்று அவன் சிறைகாவலரிடம் சொல்லியனுப்பினான். சிறைக்காவலர் மணிமேகலையை அழைத்துவந்து திருமுன்விட்டனர்.

“அறிவுமிக்க” அரசனே! உன்னிடம் என்றும் அன்பறம் சிறக்க. என்று வாழ்த்தினாள் மணிமேகலை.

"சமயப்பற்றார்வமிக்க நங்கையே! நீ யார்? வியத்தக்க இக்கலம் உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” என்று அரசன் கேட்டான்.