பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள்

105

உரோம அரசின் மாபெருந் தலைவருட் பலர் இறக்கும் போது மற்ற மக்களைவிட வறியராய் இருந்து அரசியலார் செலவில் அடக்கம் செய்யப்பட வேண்டியவரா யிருந்தனர்! இத்தகைய வீரர் வாழ்ந்த நாட்டு வரலாறு ஒரு படிப்பினையே யன்றோ?

சாம்னியர் நாட்டில் போர் புரியச் சென்ற 'கூரியஸ்' கையில் செப்புக்காசுகூட இல்லாமல் அவதிப்பட்டான். சாம்னியர் பலர் பொருள்தர முன்வந்தனர். ஆனால், அவன் அதனை மறுத்து ‘கைநிறையப் பொருள் இருப்பதை நான் உயர்வாக மதிக்கவில்லை. கைநிறையப் பொருள் உடையவர்களை ஆக்கியழிக்கும் ஆற்றலும் ஆதரிக்கும் பெருமையுமே நான் விரும்புவது என்றானாம்! இந் நிகழ்ச்சியை உரோம அரசின் பெருஞ் சொல்லாளர் ஸிஸரோ பெருமையுடன் குறித்துள்ளார்.

உரோமப் பேரரசின் மாபெரும் படைகளை நடத்திய தலைவனும் அவ்வரசின் பகைவர்களை ஒறுத்தடக்கிய பெருந் திறல் வீரனுமான ஃபிளேவியஸ் போர்க்களத்தினருகே படை வீட்டில் தான் பயிரிட்ட சிறு கிழங்கும் காய் கனியும் பறித்து அவற்றை மட்டுமே உண்பது வழக்கம் என்று உரோம நாட்டு வரலாற்றாசிரியர் ஸெக்கா கூறுகிறார்.

ஸீப்பியோ என்ற தலைவன் ஸ்பானிய நாட்டை வென்று பலரைச் சிறைப்பிடித்தான்.சிறைப்பட்டவருள் ஸ்பானிய அரசன் புதல்வியும் ஒருத்தி.அவள் ஒப்பற்ற அழகி. அவள் ஒரு சிற்றரசனை மணந்து கொள்ளச் செல்லும்போது சிறைப்பட்டாள். அவள் தந்தை அவளை விடுவிக்கும்படி பெருந் தொகையை விடுதலைப் பொன்னாக ஸீப்பியோவின் காலடியில் வைத்தான். ஆனால், ஸீப்பியோ அவள் 'இப்போது என் மகள்; என்று கூறி அவள் மன்றல் நன்கொடையுடன் விடுதலைப் பொன்னையும் சேர்த்து அவள் கணவனிடம் அனுப்பினான்.

இலக்கியங்களுக்கும் இலக்கியமாகத்தக்க இது போன்ற செய்திகளில் பல உரோம வரலாற்றில் காணும் முத்துக்கள். இத்தகைய பெருங்குணங்களும் பெருஞ்செயல்களும் உன் வாழ்க்கை இலக்குகளாய் இருக்கட்டும்!

உனதன்பார்ந்த,