பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

அப்பாத்துரையம் - 27

கல்வியின் அருமையும் கல்லாமையின் சிறுமையும்

கடிதம் - 5

திங்கட் கிழமை

அரும்பெறல் சிறுவ,

திரு.மேத்தேர் (ஆசிரியர்) நேற்று எழுதிய கடிதத்தில் உன்னைப் பற்றிக் குறித்தது, நான் எதிர்பார்த்ததுமன்று; நான் விரும்பி அவாவி நிற்பது மன்று; உனக்கு நல்லறிவு கற்பிக்க அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சி பெரிது; அதற்கு நீ இத்தகைய கைம்மாறு செய்வது தவறு. மேலும் நீ நல்ல பேர் எடுக்காதவனா யிருந்தாலும் அத்தனை கேடில்லை. கெட்டவன் என்று ஒதுக்கி விடலாம். ஆனால், நீ நல்லவன் என்று உன் அருமுயற்சியால் பெயர் எடுத்துவிட்டாய். எடுத்த ஒரு பெயரை வீணே கெடுக்கலாமா? கெடுத்தால் முன் செய்த முயற்சியத்தனையும் வீணாகவல்லவா போகும்?

உன் வயதுள்ள மற்றச் சிறுவர்களையெல்லாம்விட உன் கல்வி உழைப்பால் நீ இப்போது மிகுதியாக அறிவுடையவனாய் விட்டாய். அப்பெருமையால் மற்றவர்கள் விரைவில் உன்னைத் தாண்டி முன் சென்று முதற்பரிசை எளிதில் அடையவிடுவதா? மேற்சென்று அதை அடைய உனக்குத் திறமில்லை யென்றும் சொல்ல முடியாது. நீ சற்று முயன்றால் வெற்றி உனதென்று உனக்கே தெரியும். அறிவிற் குறைந்தவரும் முயற்சியில் குறைந்தவரும் உயர்வுபெறப் பார்த்தும், நீ உன் அறிவையும் முயற்சியையும் பயன்படுத்தாதிருக்கலாமா?

அறிவில்லாத ஒருவனைப்பற்றிய ஃபிரெஞ்சுப் பாடல் ஒன்று உண்டு. கோலாஸ் என்ற அவ் அறிவிலியின் வாழ்வை அப்பாடல் எப்படிக் குறிப்பிடுகிறதுபார்!