118
அப்பாத்துரையம் - 27
களிலும் உன் கடமைகள் இவை இவை என அறிவித்திருக்கிறேன். ஆனால், கடமை எவ்வளவு இன்றியமையாததாயினும், இன்ப மன்று வருங்காலப் பயனை எண்ணிக்கூட நிகழ்கால இன்பத்தைக் கைவிடுவது அரிது பல இளைஞர் வேட்கையால் கடமைகளை மறப்பதற்கு இதுவே காரணம். ஆனால், கடமை, இன்பம் ஆகிய வற்றின் உண்மையான இயல்புகளை அறிபவர் களுக்கு அவை இரண்டும் மெய்யாக ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவையல்ல என்பது விளங்கும். ஏனெனில், கடமையே உண்மையான இன்பம்; எதிர்கால நிலையான இன்பங்களுக்கு அடிகோலுவது கடமையே.
கடமைகள் இன்பத்துக்கு உதவுபவை மட்டுமல்ல; உண்மை யான இன்பத்துக்கு அவை இன்றியமையாதவை ஆகும்.ஏனெனில், இன்பங்கள் அனைத்திற்கும் அடிப்படையான உயர்நிலை இன்பம் ஒருவன் பிறரால் தன்னை ஒத்த வயதுடையவர்களுள் சிறப்புடை யவன் என்று மதிக்கப் படுவதேயாகும். உன்னை ஒத்த பிறர் உன்னிலும் மிக்கவர் என்று கருதப்படுவதே இதற்கு மாறான உண்மைத் துன்பம் அல்லவா? உன் கல்வியிலும் மேம்பாட்டிலும் நான் எடுத்துக்கொள்ளும் அரும்பெரு முயற்சியை அறிபவர்கள், இவ்வளவிருந்தும் நீ முன்னேற்றமடையவில்லை என்று கூறும் போது உன் மனத்துன்பம் இன்னும் மிகுதியாகவே இருக்க வேண்டும்.
நீ பிறரைவிட உயர்வடைய நான் உன்னைத் தூண்டுவது உன் தற்பெருமையைப் பெருக்குவதற்காக மட்டுமன்று. அத்தற் பெருமைகூட விரும்பத்தக்க ஒன்றே; ஆனால், அதனினும் விரும்பத்தக்கது அதற்கான உண்மைத் தகுதியேயாகும். அது வெறும் தற்பெருமையன்று, பிறர்க்கு நலம் பயப்பது. உண்மையில் ஒருவன் பேரறிஞனாயிராமல் பிறரால் அறிஞன் என்று புகழடைதல் கூடும். பிறருக்கு அறிவைக் காட்டுமளவு பல துறைகளில் சிறிதுசிறிது அறிந்திருப்பதின் மூலம் இப்புகழ் கிட்டும். இதனால் தற்பெருமை மட்டுமே கிடைக்கும். உலகம் நன்மை பெறாது. துண்டு துண்டாகக் கற்ற மேலீடான அறிவு ஒரே கோவையாகமாட்டாது உருப்படியாக உதவவும் செய்யா து. ஆதலால்தான் ‘கற்கக் கசடறக் கற்பவை’, ‘ஆழ்ந்து கற்க' என்னும் அறிவுரைகள் தரப்படுகின்றன.