பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள்

அரைகுறை அறிவினால் ஆரிடர் விளையும்;

அறிவுச் சுனை நீர் அள்ளிப் பருகுக; அன்றேல் விடுக்க.

என்ற திரு. போப் அறிவுரை பொன்போல் போற்றத்தக்கது.

119

சிதறிய மேற்புல்லறிவுடையவன் போலிப் புலவனேயாவான். என் இளமையில் ஏதேனும் ஒரு துறையிலேனும் ஆழ்ந்த அறிவுச் சுரங்கத்தில் உழைத்திராவிட்டால் நான் எவ்வளவு அவப்பேறு டையவனாயிருப்பேன் என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. இப் பருவத்தில் அவ்வுழைப்பின் பயன் மட்டும் இல்லாதிருந்தால் நான் என்ன செய்யக்கூடும்? பல அறிவிலிகள் இளமையை வீணாக்கி முதுமையில் மாலையும் இரவுமிருந்து கற்று உடல் நலத்தையும் மூளைக் குளிர்ச்சியையும் கெடுப்பதுபோல நானும் கெடுத்து, வட்டிநாடி முதலையும் இழக்கத்தானே வேண்டிவரும்! அல்லது அறிவில்லாததன் பயனாய்க் கீழோர் உறவை நாடி அக் கீழோரும் புறக்கணிக்கத்தானே வாழவேண்டும்? அங்ஙனம் நான் வாழ்வதைவிட மாள்வதே மேல் என்று நான் எண்ணுவேன்.

இம் முதுமையில் எனக்குக் களைகணாய் இருப்பது நூல்களே ஸீஸரோ கூறுவதுபோல் 'நூல்கள் முதுமையின் ஆதரவு, இளமையின் அணிகலன்; அறிஞர் தொடர்பிற்கு டையீடு, இன்பவாழ்விற்குத் திறவுகோல்.'

நூலறிவைப் புகழ்வதால் நான் உரையாடலையும் இன்பங் களையும் பழிக்கவில்லை. ஆனால், அவ்வின்பங்களும் அறிவுடைய வர்கட்கே முழுமையும் பயன்படும். இன்பம் என்பது ஒரு குணம்; அது அறிவு என்னும் பொருளைச் சார்ந்தே நிற்கும். உடலில்லாத அழகு ஏது; இருப்பினும் அது உயிரிலாப் பொருள்களின் அழகு போல் இன்பங் கொடுக்குமேயன்றி இன்பம் துய்க்காதன்றோ?

ஆகவே, இளமையில் உன் இன்பத்தை அறிவோடொன்று படுத்திப் பேரின்ப வாழ்வுக்குச் சேமகலமாக அறிவைத் திரட்டி வைப்பாயாக. மழைக் காலத்தில் விதைத்து வேனிற்காலத்தில் வளர்த்துக் குளிர்காலத்தில் அறுத்தெடுத்துப் பயன்பெறுவது போல இளமையில் அறிவு விதைத்து முதுமையில் துய்ப்பாயாக.

அறிவுபற்றி என்னுரைகளை இத்துடன் நிறுத்திக்கொள்வேன். அவற்றைச் செயற்படுத்தும் வேலை திரு ஹார்ட்டி னுடையது.