பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

அப்பாத்துரையம் - 27

வனுக்கும் பிறர் தவறுதல்கள் காரணமாகவோ சூழ்நிலைகள் காரணமாகவோ இன்னல்கள் நேரலாம். அவற்றால் அறிவு, நினைவாற்றல், மனமகிழ்ச்சி ஆகியவை ஊறுபடலாம். அத்தகைய நேரங்களில் அமைதியுடன் இவற்றைச் செப்பம்செய்து உடல், உள்ளப் பண்புகளைப் பேணல் வேண்டும்.

வாழ்க்கையின் பல தோல்விகளுக்கு வித்தாயமைவது மெத்தனம் அல்லது கவனமின்மை ஆகும். உனது குணங் குறைகளை நான் நன்கு ஆராய்ந்து வருபவன் என்று உ உனக்குத் தெரியுமே. உன்னிடம் நெஞ்சுக் கனிவுபற்றியோ அறிவு பற்றியோ மிகுதி குறை கூறுவதற்கில்லை ஆயினும், மேற்குறிப்பிட்ட மெத்தனமும் அதன் பயனாகக் கவனமின்மை, மடிமை, காலங் கடத்தல் ஆகிய தீமைகளின் வித்துக்கள் மிகுதியாயிருக்கின்றன. முதுமையில் அவற்றைச் சற்று மன்னித்துக்கொள்ளவுங்கூடும். ஆனால், இளமையில் இவை மன்னிக்கத் தகாதவை. அறிவையும் உள்ளத்தின் வளர்ச்சியையும் தடைப்படுத்தி உள்ளூர நின்று வாழ்க்கையை இவை அரித்துவிடும். இவற்றுள் மற்றெல்லா வற்றுக்கும் காரணமாயுள்ளவை மெத்தனமும் கவனமின்மையுமே. இவற்றால் முயற்சி கெடுவது மட்டுமின்றி, அறியத்தக்க பொருள் கண்முன் இருக்கும்போதும் இவை அறியும் முயற்சியைக் கெடுத்து அறிவு வளர்ச்சியைத் தடுக்கின்றன. மக்களிடையே பழகும்போது பிறர் தன்மையை ஆராய்ந்தறிதல், அவர்களை மகிழ்விக்கும் முறைகளை உய்த்துணர்தல் ஆகியவற்றுக்கும் அவை தடையாகின்றன.

மேற்கூறிய தீம்புகளால் வாழ்க்கைப் பயணத்தில் தீமைகள் வருவதற்கு வழி ஏற்படும்; வந்த தீமைகளை எதிர்த்துப் போராட முடியாத மெலிவும் உண்டாகும். இவற்றை விலக்கியபின் உன் வாழ்க்கைக் குறிக்கோள் எதுவாயினும் அதனை நீ சென்றடைவது எளிது.

முயற்சியால் ஆகாத பொருளில்லை என்று கூறலாம். முயற்சியால் அறிவு, புகழ், நற்குணம் ஆகிய எதனையும் வளர்த்துப் பேணிக்கொள்ளலாம். எந் நிலையை நீ விரும்பினாலும் விடா முயற்சியால் பெறலாம். முயற்சியால் மட்டும் பெறத்தகாதது என ஒன்றைக் கூறவேண்டுமானால் அது கவிஞனாதல் ஒன்றே; ஆனால், இங்கும் கவிதையின் தன்மையை அறிதல், அதன் நலங்களைத் துய்த்தல் ஆகியவை முயற்சிக்குட் பட்டவையே.