பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள்

149

இவ்வகையில் நான் உனக்கு முதன்மையாக வற்புறுத்திக் கூற வேண்டுவது ஒன்றே - கல்வித் துறையில் நீ எவ்வளவு அரிய காரியம் செய்து முடிக்க விரும்பினாலும், எவ்வளவு அறிவைத் தேடிக்கொள்ள விரும்பினாலும், அதற்குரிய காலம் பதினெட்டு வயதுக்கு முன்னேதான். அதன்பின் உன்னை நான் எதுவும் படிக்கும்படி கூறமாட்டேன் - கூறினாலும் மிகுதி பயனிராது. ஏனென்றால், அவ் வயதுக்குப்பின் உனக்குப் படிக்கச் சமயமும் படிப்பதற்கான மனநிலையும் அகப்படமாட்டா. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நீ அவ்வயதை அடைந்து விடுவாய். இச் சிறு காலமே உன் அறிவுப்புலத்தின் விதைப்புக் காலம். அதற்குப்பின் விதைத்ததை உரமிட்டு வளர்த்துப் பாதுகாத்து அறுவடை செய்ய வேண்டிய காலம் மட்டுமே. அறிவுதேடும் வகையில், நூல்கற்கும் வகையில், நீ எவ்வளவு குறைந்த அளவு கற்க விரும்பினாலும், எவ்வளவு கூடுதலான அளவு கற்கவிரும்பினாலும், அதனை இந்த இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே கற்றாக வேண்டும். அதன்பின் கற்க முயலுதல் வீணாகும்.

இப்பருவத்தில் நீ கற்பதெல்லாம் பின்னாட்களில் ஒன்று பத்துப் பலவாய்ப் பெருகுமாதலால், இப்பருவத்தில் கல்வியில் எவ்வளவு கடுமை அல்லது தொந்தரவு இருந்தாலும் நீ பொருட் படுத்தலாகாது. அது மட்டுமன்று, கல்வியின் கடுமையே அதன் விரைவின் அளவு ஆகும். எவ்வளவு கடுமை தோன்றுகிறதோ அவ்வளவு அறிவு விதைப்பு விரைவில் நடைபெறும். குறிப்பிட்ட அக் காலத்துக்குள் உச்ச அளவு அறிவுப் பயிர் விதைக்கப்படும். உன் எதிர்கால வாழ்நாள் முழுவதும் அப்பயிரின் அறுவடையால் ஒளிபெறும்.

இளமைக்காலத்தின் சிறப்பான பயனையும் அருமையையும் அறிந்தோர் அக் காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் பொன்னே போல் போற்றுவர் என்பது உறுதி. ஏனெனில், வேறெப் பருவத் தையும்விட அப்பருவத்திற்கே, 'சென்ற நாள் மீளாது; சென்ற காலம் சென்றதே' என்ற அறிவுரை முழுவதும் பொருத்த முடையது; உண்ணல், உடுத்தல், வெளிச் செல்லல் முதலிய ன்றியமையாச் செயல்களுக்கான சமயத்தைக்கூடப் பின் நாட்களில் அவற்றை ஆர அமரச் செய்தல் தகும் என்று கொண்டு பல அறிஞர்கள் அதையும் இலக்கிய நூல்கள் வாசிப்பதில்