பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

பணியாட்கள்

அப்பாத்துரையம் - 27

கடிதம் - 23

லண்டன், பிப்ரவரி, 13, 1748.

அன்புச்சிறுவ,

லீப்ஸிக்கில் நீ உன் நேரத்தை ஒழுங்காய்ச் செலவு செய்வது பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் குறிப்பிட்ட ஜெர்மன் மொழிச் சொற் பொருள்களை விளக்கியமைக்கு நன்றி. இன்னும் ஒரு (Landsassan என்னும்) சொல்லின் பொருளை விளக்கும்படி கோருகிறேன்.

ஜெர்மன் மொழியை நன்கு பழக ஒரு ஜெர்மன் பணியாளை அமர்த்திக்கொள்வதென்ற உன் முடிவு மிக நல்லதே. ஆனால், அவன் ஆங்கிலமோ ஃபிரஞ்சோ அல்லது உனக்குத் தெரிந்த வேறு மொழி எதுவுமோ தெரியாதவனாய் ஜெர்மன் மொழி மட்டும் தெரிந்தவனாகப் பார்த்துத் தெரிந்தெடு.அதோடு புதுப்பணியாள் எடுப்பதில் நீ ஒரு முறையைக் கையாளுவது இன்றியமையாதது. புதிய ஆள்வரவு தன் நிலையையும், உரிமையையும், நாளடைவில் தன் இடத்தையும் போக்கி விடக்கூடும் என்று பழைய ஆள் நினைக்க இடம் தராமல் பார்த்துக்கொள். புதிய ஆளுடன் பழைய ஆளையும் வைத்துக் கொள்வதோடு பழைய ஆளின் ஊதியம், மதிப்பு ஆகிய எவற்றையும் அவன் பழமை சார்ந்த உரிமையாகத் தந்து அவனை மதிப்பில் உயர்த்திவிடு. பழைய ஆள் தன் பணியை மற்றொருவன் செய்வதால் தனக்கு உண்மையில் உயர்வு வந்ததென்று கருதச்செய். அத்துடன் இடைக்கிடையே பழைய ஆளின் பணிப்பொறுப்பு விலகி விட வில்லை என்று காட்டி அவனையும் அவ்வப்போது அவ்வேலை செய்யச் சொல்.