பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(160) || __ _

அப்பாத்துரையம் - 27

இயற்கையே அரும்பெறல் உயர்வு வகுத்தல் உண்டு. மில்டன், பென் ஜான்ஸன் போன்றவர்களை ஒத்த பண்பாட்டுச் சூழல், புலமை ஆகியவற்றின் உதவியில்லாமலேயே ஆங்கிலப் பெருங் கவிஞர் ஷேக்ஸ்பியர் இயற்கையின் வன்மையால் பெருமை யடைந்தவர் ஆவர். இத்தகைய பெருமைகள் வந்தவிடத்துப் போற்றத்தக்கவையே யன்றிக் குறிக்கோளாகக் கொண்டு முயன்றடையத் தக்கவை யல்ல. ஆயினும், பண்பாடு இவ் விடத்திலும் உயர்வுதரக் கூடாததன்று. ஷேக்ஸ்பியர் தம் இயற்கையறிவுத் திறத்தால் எல்லாக் கவிஞர்களையும் தாண்டிய புகழுடையவராயினும் புலமையும் பண்பாட்டுச் சூழலும் இருந்திருந்தால் இன்னும் மெருகுபெற்றுச் சிறப்படைந்திருப்பர் என்பதில் ஐயமில்லை. உலகப் பெருங்கவிஞராகிய அவர் கவிதையில் மிகப் பொதுப்படையான கவிஞன் நூலில் கூடக் காண முடியாத பல தவறுகள், மட்டுமீறிய மிகையுரைகள் டைவந்து கண்ணூறாய் அமையாமல் இருந்திருக்கும்.

எவர் கட்டுப்பாட்டுக்கும் உட்படாது ஆங்காங்குச் சிறிதளவு காணப்படும் இவ்வியற்கை வளத்தை விட்டு மற்ற வகையில் பார்த்தால் ஒரு மனிதன் மேம்பாடும் சிறப்பும் அவனது 15-ஆம் ஆண்டு முதல் 25-ஆம் ஆண்டுவரை பெறும்பேறுகள், பயிற்சிகள் ஆகியவற்றின் பயனேயாகும். அப்பருவத்திலுள்ள நீ இப்போது உன்னையே படைத்தாக்கும் பொறுப்பிலீடுபட்டிருக் கிறாய். உன்னை உயர்வுடையவனாகவும் நீயே இப்போது படைக்க முனையலாம்; தாழ்ந்தவனாகவும் படைத்துவிடலாம்.நீ வ்வகையில் கவனக்குறைவாய் இருப்பாய் என்று நான் அஞ்சவில்லை. ஆனால், முதன்மை துணைமை திரித்தறியு மாற்றலில் வழுவி, நூலறிவு மொழியறிவு போன்ற பெரிய செய்தி களைக் கவனிப்பதுடன் நின்று விடுவாயோ என்றே அஞ்சுகிறேன். தேரின் தூண், கும்பம், துகில், கொடி ஆகியவை போன்ற

வற்றைக் கவனித்து அச்சாணி, வடக்கயிறு வளையங்கள் முதலியவை போன்ற சிறு திறங்கள் விட்டுவிடுவாயோ என்றே அஞ்சுகிறேன் அவ்வகையில் விழிப் பாயிருப்பாயாக.

உன் தந்தை