பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஈலியாவின் கட்டுரைகள்

199

ஓயாமல் பள்ளியை விட்டு வெளியே வருகிறாய்' என்பார்கள். நான் போக இடம் பெறுவது ஒன்றிரண்டு வாரங்கள் விட்டுத் தான்.பார்த்தவரையே திரும்பப் பார்ப்பது பல மாதங்கள் விட்டுத் தான். ஆனால், அதையே அவர்கள் ஓயாது வருதல் என்று கூறி விட்டார்கள்.எனக்குக் கிடைத்த அச்சிறு விடுதலையை அவர்கள் தமக்கு வந்த ஒரு பெருந்தொல்லையாக எண்ணினார்கள்.

அந்தோ! சின்னஞ் சிறு பிள்ளைகள் தாய் தந்தையரை விட்டுத் தொலைவிலிருக்க நேருவது எத்தனை கொடுமை, கொடுமையினும் கொடுமை! பகலில் உள்ளூரப் புழுங்கும் என் ஏக்கம் இரவு வேளைகளில் சிறகு விரித்துக் கனவுக் காட்சிகளாய்ப் பறக்கும். என் இளமைக் காலத் தோற்றங்கள்- என் சிற்றூரும் அதன் சிறு கோயிற் கோபுரமும் குடிசைகளும், என் ஊர்ப் பெரியார் சிறியார் இன் முகங்களும் வந்து என் கனவுள்ளந் தழுவும். அவர்களிடம் என் ஆற்றா நெடுந்துயரைக் கூறு முறையிலோ என்னவோ, நான் அலறி எழுவேன்! அந்தோ, மீட்டும் பகலிலுள்ள அதே காட்சியும் கோலமும் என் கண்கள் முன் வந்துநிற்கும்! கனவின் விளைவு, இவ் ஏக்கம் அழுகையாக மாறுவதே. பள்ளியை நினைத்து அச்சம்; என் ஊர் ஆகிய 'காலனி'யை நினைத்து வெப்பம்; இவற்றிடையே என் பள்ளி வாழ்வுக்காலம் சென்றது. அந்தோ கொடிது, கொடிது ஏழ்மை; அதனினும் கொடிது ஏழைச் சிறுவனின் பள்ளி வாழ்வு; யாவற்றினும் கொடிது அப்பள்ளி வாழ்வின் தொலைவு!

பள்ளி நாட்களெல்லாம்தான் எனக்குத் துன்பமய மென்றால் விடுமுறை நாட்களைப் பார்க்க அத்துன்பம் தானும் கேடில்லை என்று கூறத்தக்கதாயிருந்தது. 'அரை' 'கால்' விடுமுறை நாட்களை எப்படியோ கழித்துவிடுவேன். முழு விடுமுறை நாட்களில்தான் புதுத்தொல்லை. அன்றுதான் நாங்கள் பள்ளிக் கட்டுப்பாடு விட்டு நகரில் நண்பர்களுடன் கூடிப் பொழுது போக்க வேண்டும். உண்பது, உடுப்பதுமுதல் அன்று அவரவர் காரியம்தான். இதில் என் நிலைமையை யார் கண்டார்கள்? எனக்கு நேரம் போக்குவதற்கு எந்த நண்பர்கள் இருந்தார்கள்? விளையாட்டுச் செய்தியே இப்படியிருக்க, உணவும் தங்கிட வசதியும் யார் அளிப்பார்கள்? வேறு வழியின்றி நான் பள்ளியைச் சுற்றிச் சுற்றித்தான் திரிவேன்; பணியாட்களுக்கு இச்சகம் பேசியே, நான் எதையும் பெற்றாக வேண்டும்.