பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஈலியாவின் கட்டுரைகள்

203

செய்துகொண்டிருந்து, கூடிய மட்டும் பிறர் கண்ணை மறைத்து, அதனை எடுத்துச் சுருட்டிக்கொள்வான். அதை அவ்வப்போது கண்டுகொண்ட சில தோழர்கள், அவன் அதைப் படுக்கையில் ஒளித்து வைத்துக்கொண்டு தின்றான் என்றார்கள். ஆனால், அவன் இராதபோது எங்கும் தேடியும் அதைக் காணமுடிய வில்லை. அந்த உலர்ந்த பிட்டைப் பின்னும் உலர்த்தித் தின்ன அது என்ன தின்பண்டமா? ஆகவே அவன் அதை எங்கோ கொண்டு கொடுக்கிறான் என்று சிறுவன் கூறினர். இன்னும் சிலர் அவன் அதைக் கொண்டுபோய் விற்று விடுகிறான் என்றார்கள். (அந்தோ பரிதாபம்! அந்தப் பிட்டை யாராவது விலை கொடுத்துக்கூடவா பெறுவார்கள்!)

பொறாமை மிக்க தோழர்கள்- இத்தகைய செய்திகளில் கூடப் பொறாமை இடம்பெற்று விடுகிறது! - அவன் எங்கே போகிறான், யாரிடம் எதை மறைவாகக் கொண்டு கொடுக்கிறான் என்பதை உளவு காண அரும்பாடுபட்டார்கள். நெடுநாளாக ஒன்றும் அறிய முடியவில்லை. உளவாளிகள் உளவுத் திறத்தை விடச் சிறுவன் காரியத்திறம் பெரிதாகவே இருந்தது. ஏனெனில், அவன் பிட்டைத் தின்னாமல் சுருட்டிச் சென்றது மட்டும் தொடர்ந்து கவனிக்கப்பட்டே வந்தது.

இறுதியில் உளவாளிகள் மிக வெற்றிகரமாக அவன் திருட் டையும், அதில் பங்கு கொண்டவர்களையும் கண்டுபிடித்து விட்டார்கள். நகரில் ஏழைகள் தங்கும் சேரியில் பல சந்து பொந்துகள் கடந்து, ஒரு பாதாள மூலையில் உள்ள ஒரு வீட்டில் நோயாளிகளாய்ப் படுத்திருந்த ஒரு தந்தைக் கிழவனும், தாய்க் கிழவியுமே, சிறுவனின் திருட்டுப் பிட்டை நாள்தோறும் வாங்கித் தின்று பிழைத்து வந்தனர். இந்தச் செய்தி யாவருக்கம் தெரிந்து போயிற்று. ஆனால், குற்றத்தின் கடுமை இதற்கு மேல் செல்ல முடியவில்லை. இப் பஞ்சைக் கிழவர்கட்கு அச் சிறுவன் இரக்கத் தால் கொடுத்திருக்க வேண்டுமே தவிர, விலை பெற்றிருக்க முடியாதென்பதை யாவரும் ஒத்துக் கொண்டனர்.

ஆயினும், பள்ளியின் இரும்புச் சட்டத்தில் குற்றம் குற்ற மாகவே தண்டிக்கப்படும் என்று யாவரும் எதிர்பார்த்தனர்.