பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




210 ||_

அப்பாத்துரையம் - 27

மக்களாக, இரவல் கொடுப்போருள் ஒருவராக மட்டும் நடத்தப் பட்டிருப்போம். இரண்டு சார்பிலும் தீங்கற்ற, நல நிறைவு பயக்கும் நடுநிலைப் பொன்னெறியை அவர் அறிந்திருந்தார். அக் குடிப் பெருமையின் புறச் சின்னமாக மட்டும் அவருக்கு ஒரு தொடக்க வசதி இருந்தது. அவர் போதிய செல்வ நிலையுடன் வாழ்க்கை தொடங்கினார். அதே பணம் நம் இனத்தவரிடமிருந்தால் நம் பணத்தை நம் பணமாக வைத்துச் செலவு செய்தபின் திண்டாடு வோம். ஆனால், நம் ரால்ஃவ் தம் நயமிக்க பொது உடைமைக் கொள்கையை முதலிலிருந்தே கையாண்டார். தம் பணத்தை நன்கு பயன்படுத்த அவர் கண்ட வழி, அதைக் கூடிய மட்டும் விரைவில் வள்ளன்மையுடனும் பெருந்தன்மையுடனும் செலவு செய்வதே. தாராள மனப்பான்மையுடன் தம் பணத்தைக் கொடுத்தும் எறிந்தும் தீர்த்த பின், அவர் அதே தாராள மனப்பான்மையுடன் இரவல் வாங்கினார். ஆனால், இப்போதும் வாங்கியதை வைத்துப் பார்க்கும் சிறுமைக் குணம் அவரிடமில்லை. இறைத்த கிணறு ஊறும் என்ற உண்மை யறிந்து, வந்தவுடன் பணத்தைச் செலவு செய்தார். காற்றற்ற இடத்தில் காற்று விரைந்து புகுவது போல, அவர் கை வறுமையாக ஆகப் பல திசையிலிருந்தும் பணம் வந்து கொண்டேயிருந்தது. கடைசி நாள் வரை அவர் வாங்காது இருந்ததுமில்லை. வாங்கியதை வண்மையுடன் வீசி எறிந்து வழங்காது இருந்ததுமில்லை. கடல் சூழ்ந்த இந் நாட்டினிடையே அவர் எங்கும் சுற்றித் திரிந்து எல்லாருடனும் ஊடாடியுள்ளார். இத்தகைய வாழ்வினிடையே இந்நாட்டாருள் பத்திலொரு வருக்குக் குறையாமல் அவருக்கு இறை கொடுத்திருப்பர் என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். என்னளவில் இது சற்று மிகையுரை என்றே எண்ணுகிறேன். அவருடன்கூட நான் பல இடங்களுக்குச் சென்று அவருக்குக் கடன் கொடுக்கும் பெரும் பாலாரைப் பார்த்திருக்கிறேன். பிரிட்டனில் நூற்றுக்கு நாலைந்து பேராவது அத் தொகையிலிருப்பார்கள் என்பதில் எனக்கு ஐய மில்லை. இப் பெருந்தொகை கண்டு அவர் சிறிதும் மலைக்க வில்லை. அது தன் குடிப்படைகள், தனக்கு இறை கொடுத்துதவும் தன் கட்சிக்காரர்கள் என்று அவர் பெருமையுடன் கூறுவார். இவ்வளவு பேர் கடன் கொடுக்க ஒருக்கமாயிருந்தும், அவர் எப்படி அவர்களிடம் வாங்குவதில் குறை வைக்காமல், பையை