6. மௌன வழிபாடு
பிறப்பினில் மூச்சின்றிப் பிறந்திடும் மோனமே! சிறப்பநெஞ் சகஆழம் திறந்திடும் நீள்மதகே! சொல்கடந்த ஒன்றதனின் சொல்லாடாத் தோன்றலே! சொல்கெழு வாய்அடைத்து நெஞ்சம் திறப்பாய்நீ! மறைசெய்தி காக்கின்ற மனக்குகந்த தோழன்நீ! மறைசமய வாய்மைநிலை காட்டுகின்ற உரைகல்நீ! கண்டுணர்ந்தார் கருத்தாழம் காட்டவல்ல வான்முழக்கே! தண்டுகின்ற பாலைநிலக் கானலிடை வாடாமே, நாட்டார வாரமது பற்றாது மெய்ப்பற்றால், நாட்டகம் வாழ்வோரின் கடுவாழ்வு காணாமே வல்லார் வகுத்தநீள் நல்லார்வம் கொண்டுநீ பொல்லாரும் நாவடக்கப் போதுக மாநிலத்தே!*
வாசக அன்பரீர், உண்மையான அமைதி என்பது எவ்வாறு இருக்கும் என்பதை நீர் நேரிடையாகக் காண விரும்புகிறீரா? மக்களின் சந்தடியிலிருந்து ஒதுங்கி, ஆனால், மக்களிடை யிலேயே, மக்கள் உள்ளத்தின் ஆழ்ந்த உள்ளுணர்ச்சியின் மெய்ப்படிவத்தை நீர் காண அவாவுகின்றீரா? காற்றின் ஆரவாரம் முதன் முதல் எழுவதற்கு முன்பு எங்கும் நிறைந்திருந்த அமைதியின் ஒரு கூறினைக் காணும் விழைவு உமக்கு உண்டா? உண்டானால், அதற்காக நீர் தொலைவகம் சென்று பாலைநிலம் தேடி அலைய வேண்டுவதில்லை; மண்ணுலகின் ஆழ்தடங்களைத் தொளைத்துச் செல்ல வேண்டுவதில்லை. கண்மூடிக் காதடைத்து, தன்னுள்ளே தானடங்கித் தொல்லைப்பட வேண்டியதுமில்லை. இவை யனைத்தையும் விட எளிய வழி ஒன்று உண்டு. அதுவே குவேக்கர்களின் வழிபாட்டுக் கூட்டம் ஒன்றைச் சென்று காண்பது!