238
3
அப்பாத்துரையம் - 27
லண்டன் நகர முதல்வரென்று நினைத்தாரோ, என்னவோ? “அச்சிலிஸ்' பெண்களிடையே ஒளிந்து வாழ்ந்தபோது, அவன் பெயரென்ன? ஹெர்க்குலிஸின் பயணங்களிடையே அவன் கண்ட அன்னப் பறவைகள் என்ன மொழியில், என்ன பாட்டுக்கள் பாடின?' இவைபோன்ற பழங்கால ஆராய்ச்சிக் கேள்விகள் கேட்டிருந்தால் கூட, எதையாவது கதை கட்டிக் கூறியிருக்கலாம். ஆனால், திட்டவட்ட மான இன்றைய செய்தி விவரங்களை எப்படிக் கூறுவது! ஆனால், என் மறுமொழியில்லாத் தயக்கத்தைக் கண்டு அவரே விடையளித்துப் பின்னும் பல இக் கால, அக்கால நிலைகளைப் பற்றி ஆராய்ச்சியும், ஒப்பீடும் நடத்தினார்.
வழியில் கண்ட இயற்கைக் காட்சிகளில் அவர் கவனத்தைச் செலுத்தி, அவருடைய ஆராய்ச்சிகளிலிருந்தும், கேள்விகளி லிருந்தும் நான் தப்ப முயன்றுகொண்டிருந்தேன். அப்போது இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதால் அவர், என்னை ஒரு மட்டில் விட்டுவிட்டு இறங்கி வணக்கம் செய்து சென்றார்.ஆனால், இறங்கிப்போகும்போது ஒரு வழிப் போக்கரிடம் “இப் பக்கத்தில் நோய் நிலை எப்படி? எங்கள் பள்ளியும், பக்கத்திலுள்ள பல பள்ளிகளும் இதற்காக மூடப்பட்டிருக் கின்றன” என்று கூறினார்.
இச் சொற்கள் என் உள்ளத்திலுள்ள பல கேள்விகளுக்கு விடைகூறிவிட்டன. அவர் இக்கால ஆசிரியர்களுள் ஒருவர். ஆம்! அவருடன் கூடவந்து வழிவிட்ட இளைஞன் வேலையாளு மல்லாமல், கணக்கனுமல்லாமல், மகனுமல்லாமல் இவர்கள் எல்லாரையும் ஒத்திருந்ததன் இரகசியமும் இப்போது விளங்கி விட்டது. அவன் அவர் மாணவன், மாணவருள் சற்று மேல் வகுப்பிலுள்ள வயதுவந்த மாணவன் என்பதும் தெரியலாயிற்று. ஆசிரியர் என்று தெரியவந்தபின், அவர் கேள்விகளும் புரிந்தன. மற்ற சீமான்கள் போலத் தம் அறிவைச் சுட்டிக் காட்டுவதற்காக அவர் கேள்விகள் கேட்கவில்லை; அறிவைப் பெறுவதற்கும், அதனைத் தீட்டி வளர்ப்பதற்கும் அவர் ஓயாது கையாண்டுவரும் ஒரு பொது நடைமுறை அது என்பது விளங்கிற்று.
இந் நிகழ்ச்சி ஆசிரியர்களைப்பற்றியும் அதிலிருந்து இக்கால, அக்கால ஆசிரியர்களின் வேறுபாடுகளைப் பற்றியும் எண்ணமிடத் தூண்டிற்று.