பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8. மாயக் குழந்தைகள்

கதை கேட்பதில் குழந்தைகளுக்கு எவ்வளவோ விருப்பம்; அதிலும் தங்கள் பெற்றோர்கள் அல்லது முன்னோர்கள், தங்களைப் போல் சிறுவர் சிறுமியர்களாயிருந்த காலத்துக் கதைகளென்றால், அவர்கள் ஆர்வத்துக்கு எல்லையே கிடையாது! அவர்கள் சின்னஞ் சிறு கற்பனையுள்ளங்கள் தங்கள் கால உலகையும், தங்கள் தாய் தந்தையர் கால உலகையும் தாண்டித் தங்கள் தாய் தந்தையர்களின் தாய் தந்தையர்களுடைய கற்பனை உருவங்களுக்கு உயிரும் உணர்வும் கொடுத்து, அக் கற்பனை உலகில் ஊடாடி மகிழும். இத்தகையதோர் ஆர்வத்துடன்தான் என் வாழ்க்கையின் சிறிய ஒளிகளான என் கொஞ்சும் குருவிகள் என்னைச் சூழ்ந்து வந்தமர்ந்து கொண்டு "அப்பா, அப்பா நம் பெரிய வீட்டு ஃவீல்டுப் பாட்டியை உங்களுக்கு நேரடியாகத் தெரியுமல்லவா? அவளைப் பற்றிய கதையை இன்று எங்களுக்குச் சொல்லமாட்டீர்களா?” என்று

கேட்டனர்.

ஃவீல்டுப் பாட்டி வாழ்ந்த நார்ஃவோக் வட்டத்துப் பெரிய வீடும், அதைச் சுற்றியிருந்த தோட்டந்துறவுகளும், மனையிடமும் அவர்களுக்கு ஏற்கனவே பல தடவை கேட்டுப் பழக்கப்பட்டவை. இன்று அக் குழந்தைகளும் அவர்கள் பெற்றோரும் வாழ்ந்து வரும் வீட்டைப் பார்க்கிலும் அது எத்தனையோ மடங்கு பெரிது. நாட்டுப்புறமெங்கும் பெரியவர்களும் சிறியவர்களும் பாடிப்பாடி உருகும் ‘கானகத்துச் சிறு குழந்தைகள்' என்ற கதைப் பாடலில் குறிக்கப்படும் மாளிகை இதுவே என்று அக்கம் பக்கத்தவர்கள் கூறுவதுண்டு. அதற்கேற்ப அவ் இல்லத்தின் நடுக்கூடத்துச் சுவர்களில் அக்கதைப் பாடல் பாடலாகவும், படமாகவும் தீட்டப்பட்டிருந்தது. ஆயினும், அந்தக் கதை முடிவுக்கு வருமுன் அது அச்சுவர்களில் ஓரிடத்தில் திடுமென நின்றுவிட்டது.