பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

109

முரட்டு வகுப்பினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் செல்வனையும் கூடை முடைவோனையும் அணுகிச் சூழ்ந்தனர். அவர்கள் முரட்டுத் தோற்றத்தையும் ஆரவாரத்தையும் கண்டு அவர்கள் என்ன செய்வரோ என்று செல்வன் அஞ்சினான்.

தீவின் மக்களில் சிலர் நெருங்கி வந்து அவர்களை ஏற இறங்கப் பார்த்தனர். ஆனால் அவர்கள் பேசியதைப் புது வரவாளர் இருவரும் உணர முடியவில்லை. அவர்கள் பேசின மொழி விளங்காப் புதுமொழியாயிருந்தது.புதுவரவாளர் பலபல பேசியும் அவர்களும் உணர முடியவில்லை. இதற்கிடையில் அவர்கள் செல்வன் ஆடையணிமணிகளை அவனிடமிருந்து பறித்து அவன்மீது தம் முரட்டு இயல்பைக் காட்டலாயினர்.

கூடைமுடைவோன் தன் கைச் சைகைகளாலும் அடையாளங்களாலும் தாங்கள் அவர்கட்கு வேலை செய்வ தாகவும், தங்கட்கு உணவு வேண்டுமென்றும் தெரிவித்தான். அதுகண்ட அவர்கள் கரடுமுரடான உணவுப் பொருள்களைக் கொடுத்தனர். கூடைமுடைவோன் எல்லா உணவுகளும் பழகி யிருந்ததனால் அவற்றை உண்டு பசியாறினான். செல்வன் பசியினால் வேண்டா வெறுப்புடன் ஒரு சிறிது அயின்றான். அதன்பின் அவர்கள் அவ்விருவரையும் காட்டுப்புறத்திற்கு இட்டுச் சென்று அங்கே குவிந்துகிடக்கும் கட்டைகளை ஊருக்குக் கொண்டுவரும்படி கட்டளையிட்டனர். கூடை முடைவோன் திண்ணிய உடலுடையவனாகையால் அவர்கள் கொடுத்த தொழிலை அவர்களும் வியக்குமாறு விரைந்து செய்தான்.செல்வனோ ஒரு கட்டையைக் கூடத் தூக்க முடியாது வேலைசெய்வதாகப் பாசாங்கு செய்தான். எனவே அம்முரட்டு மக்கள் மிகுதியான நல்லுணவைக் கூடை முடைவோனுக்கும், சிறிதளவேயுள்ள முரட்டுணவைச் செல்வனுக்கும் கொடுத்தனர். ஆனால் கூடை முடைவோன் தன்னுணவில் செல்வனுக்குப் பங்கு கொடுத்து ஆதரித்தான்.

ஒரு நாள் கீழேகிடந்த செல்வனின் பழந் தொப்பி யொன்றை அத்தீவின் இளைஞன் ஒருவன் கண்டெடுத்துப் பெருமையுடன் தலையில் வைத்துச் செல்வதைக் கூடை முடைவோன் கண்டான். உடனே அவனுக்கு ஒரு புதிய எண்ணம் உண்டாயிற்று. அருகிலிருந்த சூரல்களையும் புல்களையும்