பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. டாமியின் வாசிப்பார்வம்

ஆசிரியரும் மாணவரிருவரும் நாள்தோறும் தோட்டத் தில் வேலை செய்து களைப்படைந்தபின் நூலகம் வருவது வழக்கம். இங்கே வந்தபின் ஆசிரியர் உத்தரவுப்படி ஹாரி ஒவ்வொரு நாளும் ஒரு கதை வாசிப்பான். டாமி வருமுன்பே அவன் நன்கு எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்தான். அத்துடன் அவன் நாள்தோறும் அதில் முன்னேற்றங் காட்டியும் வந்தான். எழுத்துக்களை அவன் திருத்தமாக ஒலித்து வந்ததுடன், சொற்களைச் சேர்க்க வேண்டிய இடங்களில் சேர்த்தும், பிரித்து வாசிக்க வேண்டிய இடங்களில் பிரித்தும் வாசிக்கப் பழகியிருந்தான். இத்துடன் நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்தியும், பொருளுணர்ந்து கதையிலீடுபட்டு, வேண்டிய இடங்களில் தொனியை உயர்த்தியும் தாழ்த்தியும், உணர்ச்சிக்கனிவுடன் படித்தான். இதனால் கேட்போருக்கு ஓசையின்பமும் கதையின்பமும் ஒருங்கே ஏற்பட்டன.

டாமி தொடக்கத்திலிருந்தே கதை கேட்பதில் விருப்பம் காட்டினான். ஹாரியின் வாசிப்பு முறை இவ்விருப்பத்தைப் பெருக்கி அவனைப் பதுமை போலிருந்து கதையிலீடுபடச் செய்தது. நாள்தோறும் கதை வாசிக்கும் நேரம் எப்போது வரும், எப்போது வரும் என்று அவனை அதே ஆர்வத்துடன் எதிர் பார்த்திருக்கத் தொடங்கினான். ஆசிரியர் அவனது இவ் வார்வத்தைக் கண்டும் காணாதது போலிருந்து வந்தார்.

ஹாரி தன் வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சில நாளைக் கொருதரம் ஓய்வு பெற்றுக் கொண்டு தன் வீடு சென்று சில நாள் இருந்துவருவது வழக்கம். டாமி வந்தபின் சில நாட்களில் இங்ஙனம் அவன் ஓய்வுபெற்று வீடு சென்றான். ஆசிரியருடன் டாமி மட்டுமே இருந்தான். மறுநாள் வழக்கம்போல்