பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. இருநாய்கள் கதை

ஓர் ஏழைக் குடியானவனிடம் ஒரு நாய் இருந்தது. அதன் குட்டிகள் இரண்டில் ஒன்றை அவன் தானே வைத்துக் கொண்டான். மற்றதை அவன் நகரத்தில் வாழ்ந்த தன் பண்ணைத் தலைவருக்குப் பரிசளித்தான். குடியானவனிடத்திலிருந்த நாய் ‘கீப்பர்’ என்றும், செல்வனிடமிருந்த நாய் ‘ஜௌலர்' என்றும் பெயரிடப்பட்டன. இடவாய்ப்புக்குத் தக்கபடி ஜௌலர் குறைவறத் தின்று கொழுத்து அழகு வாய்ந்ததாயிருந்தது. எல்லாரையும் தன் நடிப்புக்களாலும் கரண வேடிக்கைகளாலும் அது மகிழ்ச்சியூட்டியது. கீப்பரோ ஏழையாக வளர்ந்து குச்சுப் போன்ற உடலும் ஒட்டிய வயிறும் முரட்டுக் குணமும் டையதாயிருந்தது. ஜௌலர் நகரிலிருந்ததனாலும், இன்ப வாழ்வே வாழ்ந்ததனாலும், பெரும்பாலும் கோழையாயிருந்தது. கீப்பரோ ஓநாய்களிடையேயிருந்து ஆடுமாடுகளைப் பாதுகாத்தும் அவற்றுடன் போரிட்டும் தலைவனையும் கால்நடைகளையும் காத்தும் ஒப்பற்ற வீரமுடையதாயிருந்தது.

பண்ணைத் தலைவன் தன் நாட்டுப்புறப் பண்ணை களைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தபோது ஜெளலரும் உடன் வந்தது. ஜௌலரின் உடன் பிறந்த நாயாயிருந்தும் கீப்பர் அதைப்போல அழகாயும் கவர்ச்சியுடையதாயும் இல்லை என்று செல்வன் ஏளனம் பேசிக் கொண்டிருந்தான். ஜௌலரும் கீப்பரை ஏளனமாகக் கருதித் தொலைவில் நின்றிருந்தது. ஆனால் ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி செல்வன் கருத்தை முற்றிலும் மாற்றியது.

காட்டுப் பாதையில் இரு நாய்களுடனும் செல்வன் போய்க் கொண்டிருந்தான். திடுமென ஒரு புதரினின்றும் ஒரு ஓநாய் வெளி வந்து அவன் மீது பாய்ந்தது. அதன் செங்கண்களையும் மயிரடர்ந்த உடலையும் கண்டதுமே செல்வனுக்கு உயிர் உடலில் இல்லை. அவன் அரவம் கேட்டதே முன் சென்ற ஜௌலர் பின்னோடியது கண்டு அவனுக்கு மேலும் திகில் ஏற்பட்டது.