பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




11. டாமி உதவும் குறிப்பறிந்து உதவப் பழகுதல்

டாமி குட்டையில் விழுந்தபோது அவனைத் தூக்கி விட்ட பையனை அவன் என்றும் மறக்கவில்லை. ஹாரியுடன் பேசியதன் பயனாக, தான் அவனுக்கு நன்றிகூடக் கூறாமல் நழுவி வந்தது பெருந்தவறு எனக் கண்டான். அத்துடன் அன்பும் உதவியும் நன்றியும் கீழ் உயிரினங்களிடத்தில் கூட அடிக்கடி காணப்படுகின்றன என்பதும் அவனுக்கு விளங்கிற்று. ஆகவே எப்படியாவது அச்சிறுவனைக் கண்டு அவனிடம் மன்னிப்புக் கேட்டுத் தன் நன்றியறிதலையும் அவனுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று அவன் விரும்பினான். அத்துடன் ஏழைகள் பிற்படுவதற்கு உணவு உடை முதலிய வகைகளில் அவர்கட்கு வாய்ப்புப் போதாமையே காரணம் என்பதையும் ஆசிரியர் அவனிடம் வற்புறுத்தியிருந்ததனால் அச்சிறுவனுக்குத் தான் நன்றியுரை மட்டும் கூறி நிறுத்திவிடாமல், தன்னாலான உதவிகளும் செய்ய அவன் உறுதி கொண்டான்.

அவன் விரும்பியபடியே அவன் சிறுவனை அன்று மாலை தோட்டத்தின் பின்புறமுள்ள வெளியில் கண்டான். அவன் அப்போது வேலியில் படர்ந்திருந்த கொடித் தக்காளிப் பழங்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தான். டாமி அவனிடம் சென்று "தம்பி, அன்று நீ என்னைக் குட்டையிலிருந்து தூக்கி விட்டபின் உனக்கு நன்றிகூடத் தெரிவிக்காமற் போனதுபற்றி நான் வருத்தமடைந்தேன். அத்துடன் நான் உன்னை அவ்வளவு கொடுமைப்படுத்தியபின் நீ நன்மை செய்து விட்டதனால் உன்னைப் பார்க்கவும் எனக்கு வெட்கமாய்ப் போய்விட்டது. இரண்டு வகையிலும் நான் உன்னிடம் மன்னிப்புக் கோர வேண்டும்" என்றான்.