(156) ||
அப்பாத்துரையம் - 28
பூனை பசியில்லாத போதும் எலியைப் பிடித்துத் தப்ப விட்டு விளையாடுவதுமுண்டு. சிறு பசிவேளையில் பிடித்து வைத்துக் கொண்டு சித்திரவதை செய்வதுமுண்டு. சிறு பிள்ளைகளும் பூச்சிகளைப் பிடித்து விளையாடுவது வ்வகையினதே. கொல்லும் பூச்சிகளை நாம் தின்பதில்லையாயினும் பிற உயிர்களைக் கொல்ல இருக்கும் மனித இனம் முன் கூட்டி இக் கொலைத் தொழிலை விளையாட்டாகப் பழகிக் கொள்கிறது. சிறுபிள்ளைகள் வீடுவைத்து, பள்ளி வைத்து, போர் வீரர் வைத்து விளையாடுவது பிற்கால வாழ்க்கையின் முன் ஒத்திகையல்லவா? அது போல் பெரிய உயிரினங்களைப் பிற்காலத்தில் வேட்டை யாடிக் கொல்லுவதற்கு முன்னொத்திகையாகவே பிள்ளைகள் சிற்றுயிர்களைக் கொல்வதில் விதிர்விதிர்ப்புக் காட்டுகிறார்கள்.
டாமி
அப்படியானால் உயிர்களைப் பிள்ளைகள் கொல்வது சரி என்று கூறலாம் அல்லவா?
ஆசிரியர்
பல
இயற்கையென்று கூறலாம். ஆனால் சரி ஆகாது. விலங்குகளும் அறிவற்றவர்களும் அங்ஙனம் செய்வது இயல்பு. மனிதன் அறிவுடையவன். அவன் கொலையைக் கூடியமட்டும் குறைத்துக்கொள்ள வேண்டும். சிறு பருவத்திலேயே பயிற்சி யிடையே பயிற்சியாக இதனையும் அவன் பழகிக் கொள்ளுதல் வேண்டும். விலங்குகளில், மனிதனின் பகை விலங்குகள் இருப்பது போல நட்பு விலங்குகளும் உண்டு. உண்மையில் விலங்குகள் பகையாகவும் நட்பாகவும் செயலாற்றலாம். பறவைகள் பயிர்களையும் அழிக்கும். பயிர்களை அழிக்கும் புழுக்களையும் அழிக்கும். குருவிகள் பயிர் மணிகளைத் தின்னும். ஆனால் அதைப் பெருக்குவதும் ஒரு நாட்டிலுள்ள பயிர் மணிகளை உலகமெங்கும் பரப்புவதும் அதுவே. மனிதன் தனக்குள் மட்டுமின்றி விலங்குகளுடனும் நட்பு உணர்ச்சி பழகினால் பகை விலங்குகளை நட்பு விலங்குகளாக்கலாம். அப்படி ஆக்கின விலங்குகளே குதிரை, ஆடு, மாடு, நாய், பூனை, கீரி முதலியன. நாயும் பூனையும் இயற்கையில் பகை உயிர்களானாலும், மனிதன் இரண்டையும் பழக்கி ஒரே வீட்டில் வளர்க்கிறான் அல்லவா?