பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18. அறிவின் ஆற்றல்

ஆசிரியர் பார்லோ சமயத்துறை ஓதுவாரானாலும் சமயத்துடன் அன்பையும் அறிவையும் ஒன்றுபடுத்திச் சிறுவரை மக்கட்பணியில் ஈடுபடுத்தினார். 'மக்கட் பணி யிலீடுபடாத சமயம் போலிச் சமயம்; அது சமய எதிர்ப்பை விடப் பன்மடங்கு தீயது என்ற அறிவுரையை அவர் மாணவ ருக்குப் புகட்டினார். அதுபோலவே கல்வியும் அறிவும் ஆற்றலும் மக்களிடையே படித்தவரை உயர்த்தி, மக்களிடையே உள்ள உயர்வு தாழ்வுகளை மிகுதிப்படுத்துவதற்கல்ல; அவற்றைக் குறைத்து மனித சமூக முழுவதற்கும் பணி செய்வதற்கே என்று அறிவுறுத்தினார். இத்துடன் அறிவு வேறு, விளையாட்டு வேறு, வாழ்க்கை வேறு என்ற எண்ணத்தைப் போக்கி மூன்றும் மனிதன் வளர்ச்சியின் மூன்று இணைபிரியாப் படிகளே என்று காட்டினார். சிறுமைப் பருவம் விளையாட்டுப் பருவம். அவ்விளையாட்டு விளையாட்டுக் கல்வியாய், பின் கல்வி விளையாட்டாய், இறுதியில் வாழ்க்கைப் பயனாய்க் கனிவுறுகிறது. மூன்று பண்புகளும் ஒவ்வொரு படியிலும் மிகுதியாக வளர்ச்சியுற்றாலும் உண்மையில் எல்லாப் படிகளிலும் மூன்றும் கலந்து இணைந்தே நிற்கின்றன. பிள்ளை விளையாடும் பொருள்களைப் பிடித்தும் உடைத்தும் சுவைத்தும் விளையாட் டுடன் அறிவும் பெறுகிறது. அவற்றுள் தின்ன முடிபவற்றைத் தின்று பயனும் பெறுகிறது. கல்வியிலும் எழுத்தறிவு பயனை நோக்கியது.பாட்டும் நாடகமும் கலையும் அதன் விளையாட்டுப் பகுதிகள். அறிவு நூல் அறிவு பெருக்குவது. வாழ்க்கையிலும் தொழில், பயன் கருதியது. விருப்பத் தொழில், கேளிக்கைகள், கலைத் தொழில்கள், வேட்டை முதலியன விளையாட்டின் முதிர் நிலைகளே. வாழ்க்கையின் வெற்றி தோல்விகளும், குடும்ப சமூகப் பணிகளும், அரசியல் தொண்டும் அறிவு பயன் இரண்டும் கருதின.