பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




21. தொலை நோக்காடி

திரு பார்லோவின் தோட்டத்தின் ஒரு மூலையில் ஒரு சிறிய இரண்டடுக்கு மாடி இருந்தது. அங்கே ஆசிரியர், பிள்ளைகளை என்றும் கூட்டிக் கொண்டு போனதில்லை. அது அத்தோட்டத் துடன் சேர்ந்தது என்பதே அவர்களுக்குத் தெரியாது. ஒரு நாள் அதிலிருந்து ஆசிரியர் வெளிவருவது கண்ட ஹாரி, ‘அக்கட்டடம் யாருடையது? என்ன கட்டடம்' என்று கேட்டான். திருபார்லோ, “அது நம் கட்டடமே நம் தோட்டத்தைச் சேர்ந்ததே. வான நூல், உயிர் நூல், இயல் நூல் ஆகியவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளை நான் இங்கே என் அறிவு விளக்கத்துக்காக மேற்கொள்வது வழக்கம்” என்றார்.

ஆசிரியர் இல்லத்தின் ஒரு பகுதியில் ஆசிரியர் செய்வது, ஹாரிக்குக்கூடத் தெரியாமலிருக்கிறதே என்று டாமி மனத்துக்குள் கூறிக் கொண்டான். ஆசிரியர் அதைக் குறிப்பாக அறிந்து “இச்செய்திகளை நான், வேண்டும் போதன்றி யாருக்கும் தெரியப்படுத்துவதில்லை. என் வேலை சமயப்பாசுரம்பாடுவது. அதற்கு நாட்டுப்பற்றோ மக்கட் பற்றோ மிகுதி அறிவோ வேண்டுவதில்லை என்று கருதப்படுவதை நான் அறிவேன். இவை சமயப் பணிக்கு ஒவ்வாதவை, மாறானவை என்று கூட எண்ணுபவர்கள் இன்னும் இந்நாட்டிலும் பிறநாட்டிலும் இல்லாமலில்லை. அறிவியல் மிகவும் முன்னேற்றமடைந்து அதன் வாணிகப் பயறு எல்லாம் நுகர்ந்தாலும் அதன் பண்பும் பெருமையும் இன்னும் உலக மக்களில்

எல்லா வகுப்பினரிடையும் சிறிதும் பரவி விடவில்லை. ஆகவே இவற்றை என் சமயப் பணிக்குக் குந்தகமில்லாதபடி மறைவாகவே நடத்தி வருகிறேன்.இப்போது ஹாரியும் நீயும் பல செய்திகளை அறிந்து கொண்டிருப்பதால் உங்களுக்கு இவ்விடத்தைக் காட்டுகிறேன்” என்று அழைத்துச் சென்றார்.