பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

189

மீண்டும் மீண்டும் படும் அடி தாங்காமல் உங்காரமிட்டு வளைய வளையத் திரும்பிச் சிறுவனின் பிடியிலிருந்து தப்ப முயன்றது. அவனோ தானும் திரும்பித் திரும்பி அதற்குப் பிடி கொடுக்காமல் மீண்டும் மீண்டும் அடித்தான்.

இப்படிச் சிறிது நேரம் காளைக்கு நீகிரோச் சிறுவன் தாக்குக் கொடுத்ததன் பயனாக, காளைகளை அடக்கும் வீரர் பலர் கயிறும் சாட்டையும் கைக் கொண்டு திரண்டு வந்து மாட்டின் குளம்புகளிலும் கொம்புகளிலும் கயிறுகளை மாட்டி வரிந்து இழுத்து அதனைப் பிணித்தனர். டாமியின் உயிரும் ஹாரியின் உயிரும் நீகிரோச் சிறுவன் திறமையால் காப்பாற்றப் பெற்றன.

ஹாரி மெர்ட்டனுடன் வந்த வேலைக்காரர்கள் அவனுக்கு இடையூறு வர இருந்த நேரத்தில் உயிர் கலங்கினர். மஞ்சு விரட்டுக்குப் போக வேண்டாம் என்று அவர்கள் தடுத்தும் அவர்களை மீறியே தோழர் வந்தனர் என்றாலும் அதனால் வரும் தவற்றுக்குத் தாமே தண்டனை பெற வேண்டிவரும் என்பதை அனைவரும் அறிவர். ஆயினும் ஹாரியின் வீரச் செயலால் அவன் இடையூற்றிலிருந்து தப்பியதே அவர்களுக்கு உயிர் வந்தது. அடுத்தபடிஹாரிக்கு இடையூறு என்று அவர்கள் அஞ்சினாலும் நீகிரோவால் அது தவிர்க்கப்பட்டது கண்டனர். இன்னும் இருந்து நீகிரோப் பையன் கதியைப் பார்க்க அவர்கள் விரும்பி னாலும் அவர்கள் பொறுப்பு இடந்தரவில்லை. மேலும் டாமிக்கு உடலிடை ஊறு எதுவுமில்லாமலிருந்தாலும் அச்சத்தால் அவன் கை கால்கள் ஓய்ந்து விழுந்து கிடந்தான். ஆகவே அவர்கள் அவனைத் தூக்கிக் கொண்டு இல்லம் வந்தனர். ஹாரி, அவனுக்கு இனி இடர் இல்லை என்று கண்டதனாலும் நீகிரோவின் பாதுகாப்பில் இப்போது அவன் கருத்துச் சென்றதனாலும் அவன் உடன்செல்லாது பின் தங்கினான்.

காளை அடக்கப்பட்டு நீகிரோச் சிறுவனும் காக்கப் பட்ட பிறகே ஹாரிக்கு முழு உயிர் வந்தது. அவன் சென்று அச்சிறுவனை ஆரத் தழுவிக் கொண்டு பலவகையிலும் நன்றி பாராட்டித் தன்னுடன் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தான். தான் எத்தனை உதவி யாருக்குச் செய்தாலும் பிச்சைக்கார நீகிரோவாகிய யாவரும் தன்னைத் தீண்டி வீட்டுக்கே விருந்தாக