1. கன்னியின் சோதனை
(1167 முதல் 1175 வரை நடைபெற்ற பாண்டிய உள்நாட்டுப் பெரும் போரைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட தழுவல் சிறுகதை)
வணங்காமுடிப் பாண்டியரின் வழிவந்தவள் அவள். அவர்கள் குருதி அவள் நாடி நரம்புகளில் ஓடிற்று. அவள் எடுப்பும் துடிப்பும் இதைப் பறைசாற்றின. ஆனால் அவனும் இளைத்தவனல்ல. இணங்காத வரை இணங்கவைக்கும் இரும்புறுதி படைத்த சேரக் குடிச்செம்மல் அவன். அவளை அவன் விடாது பின் தொடர்ந்தான்.
இடமும் சூழலும் அவனுக்கு உதவின. நங்கை சென்ற பாதை தருவை நீர்ப்பரப்பில் போய்த் திடீரென்று முடிவுற்றது. அவள் அங்குள்ள ஒரு குத்துக் கல்லின்மீது அமர்ந்தாள். காளையும் அவளை அணுகினான். அருகிலேயே அமர்ந்தான்.
'வேணி! எவ்வளவு நேரம் உன்னை விடாது தொடர் கிறேன்? ஏன் இப்படி காடு மேடாக ஓடுகிறாள்? இதோ பார். உனக்கென்று பிட்டும் அப்பமும் பதநீரும் கொண்டு வந்தி ருக்கிறேன். உணவு நீரில்லாமல் எவ்வளவு நேரம் இப்படிச் சுற்ற முடியும்? வா, சிறிது உணவருந்தி விட்டுப் போகலாம்" என்றான் அவன்.
அப்போதுதான் அவனை முதன் முதலாகக் கவனிப்பது போல அணங்கு அவன் முகம் நோக்கினாள்.
"வேண்டாம் வானி! அது உனக்கு உனக்கு உரிய உணவு. மக்களெல்லாம் உணவும் நீரும் இல்லாமல் துடிக்கும் காலம் இது. இந்நிலையில் உன் உணவுக்கு நான் எமனாகிவிட விரும்பவில்லை. நீயே தின்று பசியாறு. நான் ஏற்கனவே சருகும் நீரும் உட்கொண்டு விட்டேன்” என்றாள் அவள்.