202) ||__
அப்பாத்துரையம் - 28
அவன் பெயர் வானியல்ல. வானவனேந்தல். நண்பர்கள் தான் சுருக்கமாக அவனை வானி என்று அழைத்தார்கள். அது போலவே அவள் பெயரும் வேணியல்ல. வேண்மாள் என்ற அழகிய பெயரையே அவள் தோழியர் அப்படிக் குறுக்கி இருந்தார்கள். இருவருமே ஒருவரை ஒருவர் அழைக்க வழங்கிய பெயர்ச் சுருக்கமே அவர்கள் பழக்கத்தைச் சுட்டிக் காட்டிற்று.
பாண்டிநாடு அன்று போர்ப் புயலில் சிக்கிச் சீரழிந்து கிடந்தது. முரட்டுச் சிங்கள வீரனின் அட்டூழியங்கள் ஒருபுறமும் பஞ்சமும் நோயும் வறுமையும் மற்றொரு புறமும் நாட்டு வாழ்வைக் காட்டு வாழ்விலும் கொடியதாக்கியிருந்தன. இந்நிலையில் பாண்டி நாட்டுச் செல்வியாகிய வேண்மாள் வீடு குடி இழந்து, துணையிழந்து, ஊர் ஊராய்ந்துத் திரிந்தாள். நிழல் போல வான வனேந்தல் அவளைத் தொடர்ந்து பகை வீரர்களிடமிருந்து அவளைக் காத்திராவிட்டால், அவள் அவ்வளவு எளிதாகத் தருவைக்கரை வந்து சேர்த்திருக்க மாட்டாள். ஆனால் இயல்பாகத் துணிச்சல் மிக்க அந்த அணங்கு அதை முற்றிலும் உணர்ந்தவளல்ல. அது 'தெய்வத்தின் செயல்' என்று மட்டுமே அவள் உணர்ந்தாள். ஒரு காதல் தெய்வத்தின் செயல் அது என்பதை அவள் எண்ணிப்
பார்க்கவில்லை!
சிங்களப் படைத்தலைவன் இலங்காபுரனை எதிர்த்துப் பாண்டியனுக்கு உதவ வந்த சேரர் படையிலே வானவனேந்தல் ஒரு வீரன். சேரர் படைகள் பல களங்களில் சிதறி ஓடத் தொடங்கிய பின்னும், அவன் தன் நாட்டுச் சேவையிலேயே நாட்டமாயிருந்து வந்தான். ஆனால் வேண்மாளின் வேல் விழி அவனை நாட்டுச் சேவையிலிருந்து மெல்ல மெல்லப் பெண்மையின் சேவைக்கே இழுத்து வந்தது. எதிரிகளின் மாயவலைகளிடையே கண்ணும் கருத்துமாய் அவளுக்குக் காவலாக இருந்து வந்தவன் அவன். ஆனால் அப்பெண்மையின் மாயவலையில் சிக்கினான். இதில் அவன் பெற்ற வெற்றியும் மிக மிகச் சிறிது. அவள் அவன் உதவியை விரும்பி நாடியதாகவும் காட்டிக்கொள்ளவில்லை. அதைவெறுத்ததாகவும் வெளிப்படை யாகக் கூறவில்லை. மொத்ததில் அவள் அவன் காதலுக்குப் பிடி கொடாமல் அவனை இழுத்தடித்து அலைக்கழித்து வந்தாள்.