(208
அப்பாத்துரையம் - 28
அவள் உள்ளமறியாமல் தடுமாறவில்லை. ஆயினும் இப்போதும் அவன் உள்ளத்தில் ஒரே கவலை-போரோ அமைதியோ- வாழ்வோ, தாழ்வோ-அவளின்றி அவனுக்கு வாழ்வில்லை. அவள் காதலில்லாமல் அவனுக்கு வாழ்வில் குறிக்கோளில்லை. செயல் நோக்கமில்லை. அவள் நோக்கத்தைத் தன்வழி திருப்ப வகை தெரியாமல் அவன் திண்டாடினான்.
அவன் விரும்பியது காதல்-அவள் விரும்பியது விடுதலை! அவன் காதல் பேச்சை எடுக்கவே அவள் இடம் தரவில்லை. விடுதலை நோக்கி அவன் உள்ளத்தைத் திருப்ப முயன்றாள் அவள். ஆனால் அவனோ விடுதலையைப் பற்றி எண்ணவே நடுங்கினான். ஏனென்றால் அன்று விடுதலை என்பது காதலின்
டுகாடு மட்டுமல்ல; உயிரின் சாக்காடு என்பதை அவன் உணர்ந்திருந்தான். புனல் விளையாட்டாளர்கள் குருதி சிந்திய பிணங்களையே விடுதலை என்ற சொல் அவன் கண்முன் கொண்டு வந்தது. அவன் சாவைக் கண்டு அஞ்சவில்லை. சாவை வெறுக்கவில்லை. ஆனால் அவன் ஆருயிர்க் காதலியின் உயிர்- அதைப் பலி கொடுக்கத்தான் அவன் தயங்கினான். உயிர் கொடுத்துக் காதலைப் பெற அவன் தயங்கவில்லை. ஆனால் காதலியின் உயிரை இடருக்குள்ளாக்கி-சாதல் கொடுத்து உயிர் பெறும் நிலையை எண்ணியே அவன் அஞ்சினான்.
அவனது ‘காதல்-விடுதலை போராட்டங்கள் கிட்டத்தட்ட தருவைக்கரைப் போராட்டத்தின் எதிரொலிகளாகவே அமைந்தன. அவனை அச்சந்தரும் தேர் உச்சிக்கு அவள் இட்டுச் செல்வாள். அடுத்த கணம் சாவின் குகை போன்ற பள்ளத்தில் அவள் குதிப்பாள். அவளுக்காக அவனும் சாவுடன் போராடத் தயங்கவில்லை.சில சமயம் அவள் அவனை எங்கும் சுற்றியடித்துக் கணத்தில் மறைந்து விடுவாள். அவளைத் திரும்பவும் தேடிப் பிடிக்கும் வரை அவனுக்கு உடலில் உயிர் அமையாது. அம்முயற்சியை மறைந்து நின்று அவள் பொறுமையுடன் பார்த்துக்கொண்டேயிருந்து விடுவாள்.
அவன் ஓயாது அவளைத் தன் பாசவலையில் தள்ள அரும்பாடுபட்டான். அவள் ஓயாது அவளை எங்கும் அலைக்கழித்துத் திணற வைத்தாள். இறுதியில் ஒரு நாள் அவள் அவனிடம் புது மாதிரியாக நடந்து கொண்டாள்.