பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

7

நூற்றாண்டு அல்லது கி. பி. முதல் நூற்றாண்டு ஆகும். சமண மரபுரையை விட்டு வேறு வகையாக ஆராய்ந்தவர்களும், அவர் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு என்றே கூறுகின்றனர்.

நீலகேசி, மேற்கூறிய மூன்று நூல்களுக்கும் பிந்திய தென்று ஏற்படவே, அதன் முந்திய கால எல்லை திருக்குறளின் காலமாகிய கி.பி. முதல் நூற்றாண்டு என்று கூறலாம். அதாவது அது முதல் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதேயாகவேண்டும். பிந்தியகால எல்லையை வரையறுப்பது இதனினும் சற்றுக் கடிது. இவ்வகையில் நாம் முற்றிலும் நூலின் அகச்சான்று களையே ஆராய்தல் வேண்டும். இந்நூலுடனொத்த சமய விளக்கத்திரட்டுகள் அனைத்தும் தம் காலத்திலுள்ள சமயக் கோட்பாடுகள் எல்லாவற்றையும் கூடியமட்டும் விளக்குபவை யாகும். இம்முறையில் பின்னாட்களில் தழைத்தோங்கிய சங்கரர், இராமானுசர், மாத்துவர் ஆகியவர்களின் வேதாந்தக் கோட் பாடுகளை இவர் குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது. அதுமட்டு மன்று, பிற திரட்டுக் (சர்வ தரிசன சங்கிரகங்)களில் விளக்கப்பட்ட கோட்பாடுகளில் பலவும் கூட இதில் குறிக்கப்படவில்லை. எனவே, இச்சமயங்களுட் பெரும்பாலனவை, ஆசிரியர் காலத்தி லில்லை எனவும், அவர் அவை வழங்கிய காலத்துக்கு முற்பட்டவர் என்றும் கூறலாம்.

மேலும், நீலகேசியில் விளக்கப்படும் சமயவாதங்களுள் புத்த சமயத்துக்கு அடுத்தபடியாக ஆசீவகவாதம் என்ற கோட்பாடு இடம் பெறுகிறது. இவ் ஆசீவகவாதத்தைப் பற்றித் தேவார திருவாசகங்களில் எத்தகைய குறிப்பும் இல்லை. வேதநெறிக்குப் புறம்பான புத்த சமண சமயங்களைப் பலவிடங்களிலும் பலவாறாகத் தாக்கி எதிர்த்த இச்சமயத் தலைவர்கள், வேதநெறிக்குப் புறம்பாக ஆசீவகவாதம் என்ற ஒரு தனிக் கோட்பாடு இருந்திருந்தால் அதனையும் எதிர்த்திருப்பா ரன்றோ? வடமொழியிலும் சங்கிரகங்கள் என்ற குழுவைச் சார்ந்த மதவாத நூல்கள் எதுவும் ஆசீவகவாதம் பற்றி விளக்கவில்லை, நீலகேசி ஆசிரியர், சமணமதத்தின் முதல் எதிர் நெறியாகிய புத்த சமயத்தோடொப்ப ஆசீவகவாதத்தை எதிர்த்திருப்பதைப் பார்க்க, அச்சமயம் அவர் காலத்தில் நன்கு தழைத்திருக்க வேண்டும் என்றும், தேவார காலத்துக்குள் அது தடந் தெரியாது அழிந்து போயிருக்க வேண்டும் என்றும் புலப்படும்.