3. மூன்று காதலர்கள்
'புருவம் கறுப்பொழியப் பிள்ளை கறுப்பில்லை; விழிகள் கறுப் பொழியவேறெதும் கறுப்பில்லை’ என்றுதான் பெண்களின் மலர் மேனியைக் கவிஞர்கள் வருணிப்பார்கள். ஆனால் காயாம்பூ இதற்கு விலக்கான ஒரு காரிகையாய் இருந்தாள். புருவத்துக்குரிய கருமையழகு மட்டுமின்றி, வில் போன்ற வளைவு நயமும் அவள் மேனியெங்கும் படர்ந்து, அவளுக்குக் கண் கொள்ளாக் கவர்ச்சி அளித்திருந்தது. கருவிழியின் கருமை ஒளியும் உயிர்த் துடிப்பும் அவள் அங்கங்கள் ஒவ்வொன்றிலும் நிலவிக் காண்பவர் அமைதிக்குப் பங்கம் விளைவித்து வந்தது. அவள் சொற்களில் புருவத்தின் வளைவு நயமும், விழிகளின் கூர்மையும் துடிப்பும் ஒருங்கே செயலாற்றின, விழிகளில் தெறித்த குறும்பு அவள் சொற்களிலும் நெறித்தாடிற்று.
விளையாட்டுப் பருவத்திலே அவள் எப்போதும் ஒரு சிறு பெண் படைக்குத் தலைவியாக விளங்கினாள். அதே சமயம் மற்ற சிறுவரை அவள் சும்மா விடுவதில்லை. அவள் என்னைக் கிள்ளி விட்டாள். இவள் என்னை அடித்துவிட்டாள், என்று அவள் ஒரு போதும் யாரைப் பற்றியும் பெரியவர் களிடம் குறைகொண்டு சென்றதில்லை. ஆனால் ‘காயாம்பூ என்னைக் கிள்ளி விட்டாள் குளத்தில் தள்ளி' என்று சில பலர் அவளைப்பற்றி ஓயாது குறை கூறுவதுண்டு. அதே சமயம் அவள் தன் நடை உடை கவர்ச்சி யாலும், கலகலப்பான பேச்சாலும் பெரியவர்கள் கோபத்தைக் கூட எளிதில் மாற்றி, வாலி கண்டபுரத்து மக்களிடையே ஒரு சிறிய இளவரசி அல்லியாகத் திகழ்ந்தாள்.
பள்ளி கடந்து, கல்லூரி சென்ற போதும் காயாம்பூவின் குறும்பு வளர்ந்ததே அன்றி, குறையவில்லை. திருமணமாகாத ஆசிரியருக்கு அவள் திருமணக் கடிதமும் மணவாழ்த்துப் பாடல்