பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. யாழ் நங்கை

இளவேனில் உலகெங்கும் ஆட்சி பரப்பத் தொடங்கியிருந்த காலம். ஆனால், இளவேனிலும் தென்றலும், தென் தமிழும் அகிலும் பிறந்த இடமென்று கருதப்படும் தண் பொதிகையின் சாரலிலே அது கொலுவீற்றிருந்தது என்று கூறவேண்டும். இந்தக் கொலு மண்டபத்தினடுவே ஒரு கொலுவரங்க மேடையாகவே ஆரியர்ப்பண்ணை வெளி காட்சியளித்தது. ஏனெனில் ஆரியூரின்

ளம் பண்ணை முதல்வரான ஆராவமுத நாயகரின் கைவண்ணம் காட்டு வளத்தைச் சோலைவளமாகவும், சோலை வளத்தைக் கனிமரக் காவளம், பூந்தோட்ட வளமாக்கியிருந்தது. அதனிடையே சிற்றாற்றின் நீரோட்டத்திடையே குற்றாலத்துடன் போட்டியிடும் இன் அருவிகள், இயற்கையோடைகளைக் கண்டு நகைக்கும்படி பன்னிற ஒளி யூடுருவப் பாய்ந்து ஏழிசை நாதங்களுடன் சலசலத்தோடும் ஓசைகள், வடிவழகும் பூவழகும் வாய்ந்த சித்திரப் பொய்கைகள் இன்பநடம் பயின்றன. பாதிகையின் அகிற்கட்டையும் சந்தனக் கட்டையும் வாரியடித்துக் கொண்டு வந்த சிற்றாற்றுடன் போட்டியிட்டுத் தென்றல் அவற்றின் குணத்தையும் தமிழ் மணத்தையும் எங்கும் அள்ளி வீசிக்கொண்டிருந்தது.

இந்த அழகு மணக் காட்சிகளில்கூடக் கருத்தைச் செலுத்த நேரமில்லாமல் இளநம்பியும் இளநங்கையும் ஒருவர் மையலில் ஒருவர் ஈடுபட்டு ஒரு பொய்கைக் கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நம்பி முகத்தைக் காணாதவள் போல் கண்டு களித்தவளாக நங்கை நாணத்துடன் அவன் சொற்களை ஆர்வத்துடன் பருகி ஒன்றிரண்டு சொற்களிலேயே தன் நிறைகருத்துத் தெரிவித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் அருகே ஓர் இளையானை தன் துதிக்கையில் இருவர் உடலையும் துளாவி விளையாடியதைக்கூட அவ்விருவரும் சட்டை