பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. கணவன்

உலக முழுதாளத் தெரிந்தவர்களுக்குக்கூடச் சில சமயம் தம்மை ஆள, தம் மனையை ஆளத் தெரிவதில்லை. மையூர் கிழான் வாழ்க்கைப் போக்கு இதற்கு ஒரு சான்றாய் அமைந்தது.

மாய மந்திரங்களுக்குப் பேர் போனது மலைநாடு. ஆனால் மலைநாட்டில் மட்டுமல்ல; தென்னாடு முழுவதிலுமே மையூர் கிழானின் பெயர் மாய மந்திரங்களைக் காட்டிலும் ஆற்றலுடைய தாய் இருந்தது. சேரப் பேரரசின் நிலப்படை, கடற்படை, மலைப்படை ஆகிய முப்பெரும் படைகளின் வரலாற்றிலும் அவன் செயல்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருந்தன.இறுதியில் அம் முப்பெரும் படைகளுக்கும் அவனே முதல்வனானான். அதுமட்டுமின்றி, அதனையடுத்து, அவனே பேரரசன் இளஞ்சேரல் இரும்பொறையன் அமைச்சனாகவும், அவன் சமய குருவுக்கு மேம்பட்ட கலையிலறிவும் சமய ஞானமும் படைத்த ஞானசிரியனாகவும் விளங்கினான். வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அவன் ஆற்றலும் புகழும் பெருகின. பேரரசின் உள்ளும் புறமும், பேரரசன் வாழ்விலும் உள்ளத்திலும் அவன் எதிர் வாக்கற்ற செல்வாக்குப் பெற்றிருந்தான்.

இங்ஙனம் குறைவற்ற நிறைவுடையதாகத் தோன்றிய மையூர் கிழானின் வாழ்வில் எவரும் எதிர்பாராத வகையில் உள்ளூர ஒரு பொத்தல் இருந்தது; அதை அவனுக்கும் உலகுக்கும் நாளடைவில் எடுத்துக்காட்ட உதவினாள் ஒரு நங்கை - அவன் முதுமைக் காதலுக்கு இலக்கான நீலமணி என்ற அழகாரணங்கே அவள்!

பேரரசின் ஆணையும் ஆற்றலும் முற்றிலும் சென்றெட்டாத அகமலை நாட்டில், வணங்காமுடி மன்னராக வாழ்ந்த மலையரை யரின் குடியில் பிறந்த நங்கை அவள். இளமையிலேயே அவள் தந்தையை இழந்தாள். தந்தையற்ற அவளுக்கு வானமே