யாழ் நங்கை
275
தில்லை. எவரும், பெண்கள்கூட அவளுடன் தொடர்பு கொள்வதை அவன் விரும்பவில்லை. அதற்காகவே மலையரையர் குடியிலிருந்து கொடுமணவல்லி என்ற மாதைத் தேர்ந்தெடுத் திருந்தான். அவள் நீலமணிக்குக் காவலாகவும் துணையாகவும் மட்டும் அமர்த்தப்படவில்லை. மற்றோர் அரிய கடமையும் அவளுக்குத் தரப்பட்டிருந்தது. அவளும் கடமையுணர்ச்சியுடன் அதை நிறைவேற்றினாள். “மையூர்கிழான் தேடக் கிடைக்காத பேரரசின் பெருஞ்செல்வம். ஆனால் அவனே உன் கணவன். உன் அன்புக்காக அவன் ஏங்கிக் கிடக்கிறான். நாடு அவன் கையில்; ஆனால் நீயே அவன் அன்புக்குரிய உயிர்க்கூடு. உலகம் அவன் காலடியில்; ஆனால் நீயே அவன் நெற்றியின் நறுமணத் திலகம். உனக்காக அவன் செய்யாத தியாகம் இல்லை; படாத பாடில்லை. அவனை ஆர்வமாகக் காதலிப்பது உன் கடமை. அவனுக்கென்றே வாழ்வது, அவனுக்குரிய நன்மனைவியாய் அவன் மனம் கோணாமல் நடப்பது உனக்குப் பெருமை தரும்” - இவை நீலமணியின் காதில் அவள் ஓயாது ஓதிவந்த போதனையாய் அமைந்தது.
பாவம்! காடும் மலையும் அலைந்து திரிந்த பறவை அவள். அவளுக்கு நாடே ஒரு சிறையாகத்தான் தோன்றிற்று. அரண்மனையோ சொல்ல வேண்டியதில்லை. அது அவளுக்குச் சிறைக் கோட்டத்துக்குள்ளும் ஒரு சிறைக் கோட்டமாக அமைந்தது. அவள் கடமை உணர்ச்சியில் தவறவில்லை. ஆனால், அவள் பழைய கலகலப்பு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அவள் சூது வாதற்ற உள்ளம் உடையவள். அன்பு கனிந்த இதயம் கொண்டவள். தன் ஒரே கூட்டாளியாக அமைந்த கொடுமணவல்லியிடம் இயல்பாக மிகுந்த பாசமும் நேசமும் காட்டினாள். அவள் கூறியபடி மையூர்கிழானிடம் மதிப்பும் பாசமும் கொள்ள அவனைக் காதலித்து அவனை மகிழ்விக்க அவள் மனமார முயற்சி செய்தாள். ஆனால் காதல் என்பது இன்னது என்று அறியாத நிலையில் அவனிடம் அவள் அச்சமும் திகிலுமே கொள்ள முடிந்தது! அதனால் அவள் காதல் முயற்சிகள் காண்பவர்க்கு நகைப்பிற்குரியவையாகவும் இரக்கத்துக்குரியவையாகவும் அமைந்தன. அவனும் அவள் அழகைப் பருகினானேயன்றி, காதலை வேறெந்த வகையிலும் எதிர்பார்க்கவில்லை. இளமையிலேயே காதலையறியாத அவன்