(276) ||
||–
அப்பாத்துரையம் - 28
முதுமையில் காதலிக்கும் ஆற்றலையே இழந்திருந்தான். குற்றேவலையே அவன் காதலாகக் கருதியிருந்தான்.
கூண்டுக்கிளி கூண்டுப் பழத்தையே கொம்புப் பழமாகக் கொத்தி வாழ்ந்தது! கூண்டையே வானமாகக் கொண்டு அதற்குள் தத்தித் தவழ்ந்தது!
நீலமணியின் வாழ்வு இவ்வாறே சென்றிருந்தால், அவள் என்றும் காதல் புகாக் கோட்டைக்குள்ளே காதலறியாக் காரிகையாகவே காலம் கழித்திருத்தல் கூடும். ஆனால் அத்தகைய போலிக் குடும்ப வாழ்விலிருந்து அவள் அழகே அவளைக் காத்தது. அது அவள் வருங்கால வாழ்வின் விதையை யாரும் எதிர்பாராத முறையில் புனைமாண் குடுமி என்ற ஓர் இளைஞன் உள்ளத்தில் விதைத்துவிட்டது. அந்த விதை விரைவில் பெரிய மரமாக வளர்ந்து கோட்டை மதில் தாவிக் கிளை பரப்பிற்று. வெளியுலகிலிருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்பட்டிருந்த அவள் காதலுக்குத் தாவ அந்தக் கிளை பயன்பட்டது.
அவன் ஆணழகன், பூவிரியும் காவிரி நாட்டுச் செம்மல். அவன் தந்தை சேரர் தலைநகராகிய வஞ்சியிலேயே சோழர் தனி மாளிகையின் தலைவராயிருந்தவர். தந்தை இறந்த பின்னும் அந்நகரிலேயே வாழ்ந்த முதியவளான தன் அத்தை வீட்டில் அவன் தங்கியிருந்தான். தந்தையின் பதவியுரிமையால் அவன் அவ்வப்போது மையூர்கிழான் மாளிகைக்குச் செல்வதுண்டு. நீலமணிக்கு அம்மாளிகையில் இருந்த கட்டுப்பாட்டின் அளவே அவளைப் பற்றிய ஆர்வத்தை முதலில் அவன் உள்ளத்தில் தூண்டிற்று. அவள் இள வயதையும், சூது வாதற்ற வெள்ளை யுள்ளத்தையும் பற்றிக் கேள்விப்பட்டபோது, அவனுக்கு அவளைக் காணும் ஆர்வமும் எழுந்தது.
அவளைக் காண்பதென்பது புனைமாண்குடுமிக்கு எளிதாயில்லை. ஏனெனில் நீலமணி பருவ இளமையை அணுகுந் தோறும், அவள் சிறைக் கோட்டத்தில் கட்டுப்பாடுகளும் பெருகின. அவளை யாராவது தற்செயலாகக் காண நேர்ந்தாலும் திட்டமிட்டுக் காண முயன்றதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். அவளுடன் தொலையுறவுடையவர்களாய எவருமே வஞ்சிமாநகர் எல்லையை அணுகாதபடி தொலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். ஆனால் அவளைக் காண