யாழ் நங்கை
279
அவன் காதலுக்கு அன்றுமுதல் இறகு முளைத்தது.ஆனால் சிறைக் கோட்டை இதற்கு மேல் எத்தகைய வாய்ப்பும் அளிக்கவில்லை. ஏவலர், பணிப் பெண்கள் பலரின் துணையை அவன் நாடினான். அவர்களில் பலர் நீலமணியின் நிலைக்கு இரங்கியவர்களே. பலர் புனைமாண்குடுமியின் நிலை கண்டு துடித்தார்கள். ஆனால், எவரும் ஆபத்து நிறைந்த அப்பணியில் ஈடுபட அஞ்சினார்கள். நீலமணியை அணுகவே யாருக்கும் துணிவு பிறக்கவில்லை. புனைமாண் குடுமி நேரே கொடுமண வல்லியைக் காண முயன்றான். ஆனால் கடமை, அச்சம் ஆகிய இரு சிறைகளுக்குள் அவள் பூட்டப்பட்டிருந்தாள். முதலில் அவன் மீது சீறி விழுந்தாள். பின் அச்சுறுத்தினாள். எச்சரித்துப் பேசினாள். இறுதியில் தானே அச்செய்திக்குச் செவி சாய்க்க அஞ்சுவதாகக் கூறிவிட்டுத் திரும்பிப் பாராது ஓடினாள்.
அவன் இப்போது நம்பிக்கை இழந்தான். நீலமணியைக் காணக்கூட வெளியேறாது படுக்கையில் சென்று விழுந்தான். அவன் உடலெல்லாம் கொதிப்பேறிற்று. நாள் கணக்காக -வாரக் கணக்காக அவன் நோய்வாய்ப்பட்டுப் புரண்டு துடித்தான். அவனுடைய அத்தை காதம்பரி அவன் நிலையுணர்ந்து தன்னாலியன்ற மட்டும் தேற்றினாள். எப்படியும் நீலமணியை மீட்டுத் தருவதாக அவனிடம் வாக்களித்து அவனுக்கு அரை உயிர் வரும்படிச் செய்தாள். அவள் கூறியபடி செய்வதாகத் தெரிவித்து அவனும் தன்னைத் தானே ஆற்றியிருந்தான்.
ஒரு நாள் காடை கவுதாரி விற்கும் குறப்பெண் ஒருத்தி காதம்பரியிடம் வந்தாள். காதம்பரி நல்ல விலை கொடுத்துப் பறவைகள் பல வாங்கினாள். நாள்தோறும் வரும்படி அழைப்பு விடுத்து அவளுடன் நெருக்கமான பழக்கம் ஏற்படுத்திக் கொண்டாள். பின் மருமகனைக் கொண்டு நீலமணிக்கு ஒரு கடிதம் எழுதுவித்து அதை அவள் மூலமே நீலமணிக்கு அனுப்பத் துணிந்தாள். ஆனால் கடிதம் யார் எழுதியது என்று மட்டும் அவன் தெளிவாகக் குறிக்கவில்லை. “கண்ணாடியில் நீ கண்ட நிழலுரு” என்று மட்டும் கையொப்பமிட்டிருந்தான். ஆடவர் எவரும் இல்லாமல் அவள் தனியாய் இருக்கும் சமயம் பார்த்துத் தரும்படி குறப் பெண்ணுக்கு எச்சரிக்கை தந்தாள் காதம்பரி.