பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




282 ||

அப்பாத்துரையம் - 28

அளவு முழுதும் எடுத்துரைத்தாள். ஆனால் மையூர்கிழான் அவற்றை ஒரு சிறிதும் நம்பவில்லை. சூதுவாதற்றவளாக நடித்துத் தன்னை நெடுநாள் ஏய்த்து வந்த கள்ளி என்று அவளை அவன் கருதினான். தாய் தந்தையற்றவள், உற்றார் உறவினர் அற்றவள் என்ற இரக்கம் ஒரு சிறிதுகூட அவனுக்கு ஏற்படவில்லை. அவளைத் தன் மலைக்கோட்டைக்கே ட்டுச் சென்று தூக்கிலிட்டு, அவளுடலைப் புலிகளுக்கு இரையாக்கி விடும்படிக் காவலர்க்குக் கட்டளையிட்டான்.

நீலமணியின் அலறல்கள் கேட்டு மலை இரங்கிற்று. மரங்கள் இரங்கின. தூக்கிடக் காத்து நின்ற காவலர்கள் கூட மனங் கலங்கினர். ஆனாலும் கடைசி நேர உத்தரவுக்காகவே அனைவரும் காத்து நின்றனர். முகமூடியிட்ட ஓர் உருவம் அவ்வுத்தரவைக் கொண்டு வந்தது. "இது கொண்டுவரும் ஆள் பலரறிய அச்சண்டாளியைத் தூக்கிலிடட்டும்! அவள் உடலையும் இ வனிடமே ஒப்படைத்து, நள்ளிரவில் புலிவாழ்காட்டுக்கு அனுப்புக!” என்ற உத்தரவில் எழுதியிருந்தது. காவலர் அவனை உள்ளே விட்டனர்.

அவன் அவளைத் தூக்குமேடை ஏற்றினான்.

அன்றிரவே அவள் உடலுடன் அவன் வெளியேறினான்.

தன் வாழ்வு அன்றுடன் முடிந்துவிட்டதாகவே நீலமணி எண்ணியிருந்தாள். ஆனால் அது அவ்வாறு முடியவில்லை. முகமூடியிட்டு அவளைத் தூக்கிட வந்தவன் உண்மையில் புனைமாண் குடுமியே! அவன் முகமூடியுடன் புறப்பட்டு மையூர்கிழான் அனுப்பிய தூதனை வழியிலே மடக்கித் துரத்திவிட்டு, தானே தூதனாக வந்தான். தூக்குக் கயிற்றுக்கு அவன் சுருக்குப் போடவில்லை, கடு முடிச்சிட்டு, கயிற்றில் பஞ்சுப் பொதிகள் சுற்றியிருந்தான். நீலமணியைத் தூக்கேற்றுமுன் அவள் கழுத்திலும் திண்ணியதோர் பட்டையிட்டு, அவளை மயக்க மருந்திட்டு உணர்விழக்கச் செய்திருந்தான். இவ்வகை முறைகளால், உயிர் போன உடலென்று உயிருடனேயே அவளை அவன் நள்ளிரவில் வெளியேற்றிச் சென்றான்.

தப்பியோடிய தூதனால் மையூர்கிழானுக்குத் தன் தண்டனை பற்றிய ஐயம் மறுநாளே ஏற்பட்டது. அவன்