யாழ் நங்கை
(283
அத்தூதனைத் தூக்கிலிட்டான். காவலர் ஏவலர்களையெல்லாம் வாயில் வந்தபடி திட்டி, கைக்கு வந்தபடி தானே சென்று புடைத்தான். தன் ஆடையணிகளைத் தானே கிழித்துக் கொண்டு தன் மதிப்பையும் மானத்தையும் மறந்து தெருத் தெருவாகச் சுற்றினான்.பேரரசன் முதல் பேரரசப் பணியாளர் அனைவரும் கண்டு கலங்கும் வகையில் வீரனாக, அமைச்சனாக விளங்கிய அப்பெருமகன் பித்தனானான்.
மாளிகை பாழடைந்தது.
அவன் உறவினர் தம் நிலையிழந்து தவித்தனர்.
வஞ்சிமாநகரே ஒளியிழந்தது. அவன் அதன் தெருக்களிலும் சுற்றுப்புறங்களிலும் 'பேய்' போலச் சுற்றினான்.
நகரடுத்த ஒரு சிற்றூரில் ஒரு நாள் நீலமணியை - அல்லது நீலமணி போன்ற ஒரு வடிவழகியை அவன் கண்டான். அவளருகே ஒரு வாலிபன் அவளுடன் கொஞ்சிக் குலவிய வண்ணம் பாசத்துடன் பழகினான். அவள் வயிறு பெருத்திருந்தது. இருவரைச் சுற்றிலும் அன்பும் ஆதரவும் கனிவுற்றிருந்தன. ஆனால் கோர வறுமையின் பிடியிலேயே இருவரும் இருந்தனர்.
"நீலமணி! நீயா? என்னை விட்டுவிட்டா சென்றாய்? ஏன் இந்த வறுமை? வா, உன் கணவன் நான்தானே, வா! மீண்டும் பட்டாடை, பகட்டான துணிமணி தருகிறேன், வா! நீ சாகாதிருந்ததற்கு மகிழ்கிறேன். அவனையும் மன்னிக்கிறேன், வா!” என்று பித்தன் பிதற்றினான். நீலமணி நடுநடுங்கினாள். ஆனால் அருகில் நின்ற புனைமாண்குடுமி அவளை அருகிழுத்து அணைத்துக் கொண்டான்.“அஞ்சாதே, நீலமணி! உன் கணவன் நான் இருக்கிறேன். என் வறுமையின் சின்னம் உன் வயிற்றில் இருக்கிறது. இப்போது இவனுக்கு அஞ்சவேண்டாம். இரக்கப்படு. இவன் முன்னாள் கணவன்; கொடுங்கோலன்; இந்நாள் தந்தை; இரங்கத்தக்க பைத்தியம்! இவனையும் நம் வறுமையில் பங்கு கொள்ள வைத்து ஆதரிப்போம்!” என்றான்.
மையூர்கிழானை அதன் பின் வஞ்சிமாநகர் அறிந்ததில்லை. ஆனால் ஒரு வஞ்சிக் கொடியின் பின்னால், “தாத்தா, தாத்தா!” என்று தாடியைப் பிடித்திழுக்கும் ஒரு சிறுவனை ஏந்திக்கொண்டு,