3. செங்காந்தள்
கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் காஞ்சி முதல் கள்ளிக்கோட்டை வரையுள்ள தெற்குக் கடற்கரை முழுவதும் போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தில் இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக மன்னர், அவர்கள் ஆதிக்கத்தை ஒழித்தனர். அந்தக் காலத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை இது.
திருவனந்தபுரத்திலிருந்து குமரி முனை செல்லும் நெடும்பாட்டையின் அருகே, குமரக் கோட்டம் என்னும் ஒரு மலை உண்டு. பாட்டையில் செல்லும் எவரையும், அதன் இயற்கை அழகமைதி கவராமலிராது. மலையடிவாரத்தைச் சூழ்ந்து, பாட்டையின் இரு மருங்கும் பரந்துள்ள பசுங்கழனிகள், மலைநங்கை உடுத்தாடும் பச்சைப் பட்டுப் பாவாடைபோல் அலையாடி நிற்கும். மலையின் சரிவில் கீழிருந்து பார்ப்பவருக்கு, மலைநங்கை மடி விரித்ததுபோல் தோன்றும் ஒரு ஏரி உண்டு. ஏரியின் கரையில் அமைந்துள்ள கோயில், மலைநங்கை மடியேந்திய குழந்தை போலக் காட்சியளிக்கும். ஏரிக்கரையிலே புலர்காலையிலே வந்து குளிக்கும் சேரநாட்டு நங்கையரும், நம்பியரும் கொடி போல் உலரவிட்டிருக்கும் அவர்களது கலப்பற்ற தூய வெள்ளாடைகளும் இக்காட்சியின் அழகுக்கு அழகு செய்து நிற்கும்.
பாட்டையில் நடந்தவாறே இந்தக் கண் கொள்ளா எழிலைப் பருகிக்கொண்டு வந்தான் மருதவாணன். 'ஆ! இதுவா செபசித்தியோன் பிறப்பிடம், எவ்வளவு கவர்ச்சிகரமான சூழலில் பிறந்திருக்கிறான் அவன்?' என்று அவன் தனக்குள் முனகிக் கொண்டான்.
மருதவாணனும்
செபசித்தியோனும் ஒருங்கே கோட்டாற்றுக் கலைக் கல்லூரியில் படித்தவர்கள். செப சித்தியோன் பிறப்பால் தமிழனே. ஆயினும், போர்ச்சுகீசியர்