பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




யாழ் நங்கை

287

விடாத அவ்வெள்ளையரை - சிறப்பாக வெள்ளை நங்கையரைக் காண அவனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது.

மடத்தின் தலைவர் வெள்ளையரானாலும் செபசித்தி யோனை நன்கறிந்தவர். அவர், இருவருக்கும் தட்டப்பம், மலைக் கனிகள், தேன், தினைமா முதலியன அளித்து அன்பாதரவு காட்டினார். அது மிகப் பெரிய மடமாக இருந்ததென்பதற்கு அதன் பெரிய கட்டிடங்கள் சான்றளித்தன. ஆனால் அதன் ஒரு சிறு பகுதி மட்டுமே மடத் தலைவரின் கீழ்ச் செயல்பட்டது. ஒரு சில கூடங்களும், அறைகளும் பாழடையாமல் மடத் தலைவரால் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டோ, கவனிக்கப்பட்டோ வந்ததாகத் தெரிந்தன. மீந்த பகுதிகள் பாழடைந்தவை அல்லது பாழடையும் நிலைக்குச் சென்று கொண்டிருந்தவை என்று தோன்றின.

மடத் தலைவர் மேற்பார்வையிலிருந்த ஒரு பெரும்பகுதி, மாளிகை போலச் சிங்காரிக்கப்பட்டிருந்தது. அதன் வாயில்களின் முன்னுள்ள தட்டிகளும், கதவு பலகணிகளுக்கு இட்டிருந்த வண்ணப் பூத்திரைகளும் அதில் வாழ்ந்தவரின் இனம், பண்பு, தரம் ஆகியவற்றை உரக்கக் கூறி நின்றன. சமயச் சார்பற்று ஒதுங்கி இன்ப வாழ்வே வாழ்ந்த ஒரு வெள்ளையர் குடும்பத்துக்குரிய டமாய் அது இருந்தது.

நண்பர் அவ்விடத்தின் உயர்வைக் கவனித்தது கண்டு, தலைவர் ஆர்வத்துடன் விளக்கம் தந்தார். “இந்த மடத்துக்குப் பெருஞ்செல்வம் அளித்த ஒரு உயர்குடி வெள்ளையரின் வீடு இது. அவர் நாஞ்சில் படைத் துறையில் உயர் பணியில் இருந்தவர். அக்குடும்பத்தை இங்கே நாங்களெல்லாம் செஞ்ஞாயிற்றுக்குடி என்று கூறுவது வழக்கம். உண்மையில் 'செஞ்ஞாயிற்று' என்பது உயர்குடி நங்கை என்ற பொருளுடைய 'செஞாரிட்டா' என்ற போர்ச்சுக்கீசியச் சொல்லின் தமிழாக்கமே. இப்போது குடும்பத்தின் பொருள் நிலை ஒரு சிறிது குறைந்தாலும், மடத்தின் ஆட்சியாளர் அவர்களைத் தனிப்பட மதித்து நடக்கும்படி எனக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். அவர்களுடன் பழகிய பின் நானும் அவர்களை மிக உயர்வாக மதிக்கிறேன்” என்றார் அவர்.

"இங்கே ஒரு நாள் தங்கி, என் பழம் பாடங்களை முடிக்கிறேனே!” என்றான் மருதவாணன்.