(294
அப்பாத்துரையம் - 28
விசாரிப்பவன் போல அவன் மெல்ல மாளிகை முன் கூடத்தில் நுழைந்தான்.
முதியமாது அவனை ஆரவாரத்துடன் வரவேற்றாள். பணிப்பெண் கூட வெளியே வந்து மீண்டும் மீண்டும் அவனை மனமார வாழ்த்தினாள். ஆனால் ஆவலாகக் காண எண்ணிய உருவம்-செம்மாதுளை போன்ற கன்னிய உடலுடைய அவ்விள நங்கை வெளியே வரவில்லை. அடுத்த அறையில்தான் இருந்தாள் என்பதை, அவன் குறிப்பாய் அறிந்தான். அவள் மூச்சுவிடும் அரவம்கூட அவனுக்குக் கேட்டது. ஆனால் அவள் வெளியே தலைகாட்டவில்லை; காலடி எடுத்து வைக்கவுமில்லை.
அவன் போக எழுந்தான். ஆனால் கண்கள் அவனையும் மீறி அறையைத் துளாவின. தாய் அதைக் கவனிப்பதறிந்த அவன், துணிந்து அவளிடம் புதல்வியின் நலம் பற்றியே விசாரித்தான். தாய்க்கு இப்போது அவள் நினைவு வந்தது. உடனே அவனைச் செல்லவிடாமல் தடுத்து, அவள் மீண்டும் புதல்வி சார்பில் அவனுக்கு நன்றி கூறினாள். "தாங்கள் அளித்த பாதுகாப்பு எங்களுக்குப் பெரிதல்ல. அவளுக்குத் தான் அதன் அருமை பெரிது. அப்படியிருக்க அவள் இப்படி நன்றியற்றவளாக நடந்ததற்கு நான் வெட்கப்படுகிறேன் - மன்னிப்புக் கேட்கிறேன்” என்று கூறிவிட்டுப் புதல்வி இருந்த அறையின் பக்கம் திரும்பி நோக்கிக் கண்டிப்புடன் பேசினாள். "செங்காந்தள்! இங்கே வா! ஏன் புலியைக் கண்டது மாதிரி பதுங்கியிருக்கிறாய்! அன்று உன் நிலையை நினைத்துப் பார்! வா, வந்து அவருக்கு உன் நன்றியும் வணக்கமும் கூறிக்கொள்” என்றாள்.
தாய் கட்டளையை மட்டும் சரிவரச் செய்பவள் போல அவள் வந்து, 'வணக்கம், நன்றி' என்ற இரண்டு சொற்களைக் கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்.
'இளமை துடிதுடிக்க நின்று, அன்று கடைக்கண்ணால் என் இதயம் கவர்ந்து அமைதியைக் குலைத்த அந்தப் பெண்ணா இவள்?' என்று மருதவாணன் வியந்தான். அன்று பெண்மையின் முளைத்த உருவாகத் தோன்றியவள், இன்று இப்படிக் கட்டுப்பாட்டின் இயந்திர உருவாகத் தோற்றுவானேன் என்று, தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான்.
"