யாழ் நங்கை
1295
ஒரு நாளைக்குப் பல தடவை அந்த மாளிகையின் பக்கம் போக அவன் கால்கள் விருவிருத்தன. ஆனால், அவன் இரண்டு நாளைக்கு மூன்று நாளைக்கு ஒரு தடவையே போகத் துணிந்தான். முதிய மாதும் பணிப் பெண்ணும் அவனுக்கு எந்தத் தயக்கத்துக்கும் வழியில்லாதபடி, வீட்டுப் பிள்ளையாகவே நடத்தினர். அடிக்கடி வந்து போகுமாறு கூறினர். ஆனால் முதலில் ஆவலின் உருவாகவும், பின் கட்டுப்பாட்டின் உருவாகவும் கண்ட அந்த அழகுருவை அவன் அதன்பின் என்றும் வெளியே காண முடியவில்லை. இரவு நேரங்களில் முன் வழக்கமாகக் கேட்ட யாழிசையைக்கூட அவன் இப்போது கேட்கவில்லை. பூ வேலைகளில் இப்போது மாறுதல் எதுவும் காட்சி தர மறுத்தது. நங்கை வாழ்வில் அப்படி என்ன மாறுதல் வந்துவிட்டது என்று அவன் மீண்டும் கவலையுற்றான். அவளைக் காண வழி என்ன என்று தெரியாமல் கலக்கமுற்றான்.
இரண்டு மூன்று நாட்களாக அவன் மாளிகைக்குச் செல்லவில்லை. உள்ளே அவளைக் காண வழியில்லை என்ற காரணத்தால் அவன் வெளியே நாற்புறமும் சுற்றிச்சுற்றிச் சென்று, எங்கேனும் பலகணிகள் வாயில்களில் அவளைப்பற்றி ஏதேனும் அரிய வழி உண்டா என்று தேடினான். சிலசமயம் பலகணிகளை அவன் கடந்து செல்லும் சமயமே கதவு திறந்த ஓசை காதில் படும். அவன் ஆவலுடன் திரும்பிப் பார்த்தால், கதவு திறந்துதான் இருக்கும் -ஒரு முகம் வெட்டி மறைவது போலத் தோன்றும். தான் காணாமல் மறைத்துத் தன்னைக் காண்பதில் என்ன மருமம் என்று அவன் உணர முடியவில்லை.
அவனால் இந்தக் கண்ணாமூச்சு விளையாட்டைப் பொறுக்க முடியவில்லை. மாளிகைக்குள்ளிருந்து பணிப்பெண் வெளியே போகும் சமயம் பார்த்து, அவன் அவளைத் தடுத்து நிறுத்தினான். அவளது இளந் தலைவியைக் காணத் தனக்குள்ள அடக்கமுடியாத ஆர்வத்தை அவளிடம் தெரிவித்தான். அவள் அதைப் பொறுமையுடன் கேட்டாள். ஆனால் அமைதியாக மறுப்பளிக்கத் தவறவில்லை. “அன்று ஆபத்தில் என்னவோ அவள் துணிச்சலுடன் வெளிவந்து பேசியிருக்கலாம். பொதுவாக அவள் எவருடனும் எதுவும் பேசவோ, எவரையும் காணவோ செய்வதில்லை. தனக்குள் தானே அடங்கிக் கிடப்பாள். அவ்வளவு