யாழ் நங்கை
305
நன்:- ஆம், தடையில்லாமல். அது தமிழ்ப் பண்புடைய விழா மட்டுமல்ல, தமிழின விழா. மலையாளிகளும் இனத்தால் தமிழ்க் குழுவான திராவிடம் சார்ந்தவர்களே. பண்பில் அது பொங்கலை விடக் குறைந்த விழாவல்ல. மேலும் பண்டு தமிழகத்திலும் அவ்விழா எங்கும் கொண்டாடப்பட்டதாகப் பத்துப்பாட்டுப் பறை சாற்றுகிறது.
அஞ்:- இவையெல்லாம் எனக்குப் புதுமையும் வியப்பும் தரும் செய்திகளாயிருக்கின்றன. தமிழ் கடந்து தென்னகமெங்கும் பரவியும் மேல் நாடுகள் வரை சென்று உலகளாவிப் பரந்தும், வடவரிடம் மட்டும் புகாத இந்தத் தமிழ்ப் பண்பு எத்தகையது? அது வடவர் மீது வெறுப்புப் பரப்புவது மட்டும்தான் என்று சிலர் கருதுவதுபோலத் தோன்றுகிறதே.
நன்:- தீமையை அகற்றுவதற்கு முதலில் அத்தீமை வரும் புறவடிவைச் சிறிது காலம் வெறுக்க நேரலாம். அது இயல்பே. ஆனால் உண்மையில் தமிழ்ப் பண்பு எந்த இனத்தையும், எந்த உயிரையும் கூட வெறுப்பதல்ல."அனைத்து உயிர் ஒன்றென்று எண்ணுவது. அது வடவரையல்ல, வடவர் பெயரால் புகுத்தப் படும் தீய பண்புகளையே வெறுக்கிறது. வடவர் பெயரால் என்ன, கடவுள் பெயரால் புகுத்தப்பட்டாலும் வெறுத்து ஒதுக்க வேண்டியதுதானே! இதை வடவர் மீது வெறுப்பு என்று கூறுவது பெரிதும் தவறு. ஏனெனில் வடவரிலும் காந்தியடிகள் போன்ற பண்பாளர் உண்டு. சமஸ்கிருதத்தில்கூட எல்லாம் தீய பண்பு களல்ல. ஆனால், துரதிருஷ்ட வசமாக பண்பற்றவர்கள் சமஸ்கிருதத்தின் பெயர் கூறி, நெடுங்காலம் தமிழ்ப் பண்புக்கு மாறான, தமிழினத்துக்கு எதிரான கூறுகளையே பரப்பி வைத்துள்ளனர்.
அஞ்:- அப்படியானால் தமிழ்ப் பண்பு என்பது என்ன, விளக்குவீர்களா?
நன்:- சங்க இலக்கியக் காட்சிகள் மூலமே விளக்குகிறேன். தமிழ்ப் பண்பு என்பது உலகின் நல்ல பண்புகளின் உச்ச நிலையான கலை வார்ப்படம். தமிழ்ப் பண்புக்கு மாறாகாத நல்ல பண்புகள் உலகெங்கும் உண்டு. ஆனால் தமிழர்கள் தீமை விலக்கி நன்மை வகுத்ததுடன் நிற்கவில்லை. நன்மையிலும் வடிகட்டிய