யாழ் நங்கை
307
காலத்தில் ஏன் புறப்பட வேண்டும்; சற்று முன்கூட்டிப் புறப்பட்டிருக்கலாமே!
புலவர்:- இருக்கலாம். ஆனால் தகடூர் மன்னன் அஞ்சியின் அன்புக்கு அஞ்சி நீடிக்க வேண்டியதாயிற்று!
பாகன்:- வீரத்துக்குத்தான் அஞ்சுவார்கள். நீங்கள் அன்புக்கு அஞ்சுவானேன்? இது விசித்திரமாய் இருக்கிறதே!
புலவர்:- ஆம்; அஞ்சியின் வீரத்துக்கு அஞ்சாதவர் இல்லை. சேர சோழ பாண்டியர் அவன் பகைமைக்கு அஞ்சு கின்றனர். குறுகிய மன்னரோ அவன் நட்புக்கே அஞ்சுகின்றனர். ஏனெனில், அந்நட்பு மூவரசர் பகையை உண்டு பண்ணக் கூடுமென்று அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் என் போன்ற புலவர்களோ அவன் அன்புக்கே அஞ்சுகின்றனர். அவனுடன் இருக்குமளவும் அவன் உரிமை விருந்தினராக, சுற்றத்தாரையும் கடந்த பங்காளிகளாக உண்டுடுத்து அவன் அரண்மனையிலே உறங்கலாம். அவன் பூங்காவனங்களில் உலவலாம். ஆனால் தன் காதலியைப் பிரிய இணங்கினாலும் அவன் இணங்குவான், புலவரைப் பிரிய எளிதில் இணங்கான். பிரியும் நாள், அணுகிற்று என்று எண்ணினாலே அவன் முகம் கறுக்கும். அது காண உள்ளம் பொறுக்காமலே, பல தடவை பிரிவை ஒத்திப் போட வேண்டி வந்தது. அவன் காதலியை எண்ணிச் செல்லும் நேரம் பார்த்து, நானும் சிறிது விலக இணக்கம் கோரித்தான் புறப்பட்டேன்.
பாகன்:- அப்படியா? நான் அவனைப்பற்றிக் கேள்விப் பட்டது சரியாய்ப் போயிற்று!
புலவர்:- என்ன, என்ன கேள்விப்பட்டீர்கள்?
பாகன்:- ஆம்; தங்களைப் போன்ற ஒரு புலவர்தான் அதைப் பாடினதாகக் கேள்வி. அவர் வேறு யாருமல்ல. செந்நாப் புலவர் அருந்தமிழ் நங்கை ஒளவையார்தான். அவர் புலவராக மட்டுமல்ல, பாகராகக்கூட இருந்தாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில் அதியமான் அஞ்சியை அவர் ஒரு தேர்க் காலுக்கே உவமை கூறினார்.
புலவர்:- தேர்க்காலுக்கா? அதியன் அஞ்சிக்கு தேர்க்கால்
உவமையா?