பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

அப்பாத்துரையம் - 28

இயற்கையான கடு உவர்ப்பைப் பெரிதும் மாற்றியிருக்கிறார். அதற்கேற்பத் தமிழில் துணிக்காப்பியங்கள் ஐந்தனுள் (சிறு பஞ்ச காவியங்கள்) அது ஒன்றாக இடம் பெற்றுள்ளது. கிரேக்க லக்கியத்தில் பிளேட்டோ என்ற அறிஞர், தம் கோட் பாடுகளை உரையாடல் வடிவில் சுவைபடக்காவிய நடைப் படுத்தியுள்ளார். பொருளால் தத்துவ விளக்க நுலாகிய அந்நூலை (ரிபப்ளிக் அதாவது அரசியல்) நாடகம் போலக் கவர்ச்சியுடன்வாசிக்கலாம். நீலகேசி ஆசிரியரும், இதே போல அறிவுரையாகிய வள்ளற்பாலையையும், தம் உரையாடல் ஆற்றலாலும், விரிவுரை ஆற்றலாலும் தீஞ்சுவைப் படுத்தி யுள்ளார்.

அறிவியற் பண்பு

இலக்கியப் பண்பிலும் பன்மடங்கு வியப்புத்தரும் செய்தி நீலகேசியில் பல இடங்களிலும் பரந்துகாணப்படும் அறிவியற் பண்பே. அவற்றுட் பல, தற்கால அறிவியலாராய்ச்சிக் கொத்தவை. ஆராய்ச்சியாளர்க்குக் கூட வியப்பும் இறும்பூதும் தரத்தக்கவை. நூலில் பரக்கக் காணக்கூடும் இவ்வுண்மையை எண்பிக்க ஒருசில செய்திகளை மட்டும் இங்கே தொகுத்துக் கூறுவோம்.

செடி கொடிகள் உயிரற்றவை என இக்காலத்தும் பாமரர் எண்ணுவதுண்டு. உயிர் வளர்ச்சி முறையில் (Evolution) அவை விலங்குகளைவிடத் தாழ்ந்தவையாயினும், அவற்றைப்போலவே உயிர் பண்புடையவை என்பதையும், பிற உயிர்களுடன் அடிப்படை ஒற்றுமைகள் உடையவை என்பதையும், தற்கால அறிவியல் ஆராய்ச்சி நன்கு விளக்குகிறது. புத்தர், செடி கொடிகள் உயிருடையவை என்ற சமணக் கொள்கையை மறுத்தபோது, நீலகேசி சமணக் கோட்பாட்டை வலியுறுத்த வழங்கும் ஆதாரங்கள், இன்றைய அறிவியலார் கூறும் ஆதாரங்களை வியக்கத்தகும் முறையில் ஒத்திருக்கின்றன.

செடி கொடிகள் உயிரற்றவைபோல் தோன்றுவதன் காரணம், உயர்தர உயிர்கள்போல அவை, ஐயறிவு (ஐம்புல நுகர்வு) உடையவையாயிராமல், ஓரறிவுமட்டும் உடை யவையாயிருப்பதே என்று நீலகேசி விளக்குகிறாள்.