(314
அப்பாத்துரையம் - 28
பொன்:- சொல்லுடி, சொல்லு! நீ கவிஞர் போல அதை அன்று வருணித்தாயே! இன்னும் ஒரு முறை அதைச் சொல்லடி கேட்போம்!
மரு:- வந்தது யானை என்று காலடியோசையால் அறிந்து, அவர் பரண் உச்சி ஏறி, கவணெடுத்து விசையுடன் எறிந்தாரே, அந்தக் கல்...
பொன்:- மாமரம் ஏழும் துளைத்ததோ?
மரு:- சீ, அது பழம் புளுகுக் கதை. இது நான் கண்ணாற் கண்டது! கேளுங்களேன்; அந்தக் கல் அருகிலிருந்த வேங்கை மரத்திலுள்ள பூக்களையெல்லாம் பொன்னை வாரி இறைத்தது போல் சிதறிவிட்டு, அத்துடன் நில்லாமல் ஆசினி மரத்திலுள்ள கனிந்த பழங்களை உதிர்த்துக் கொண்டு, அருகே தேன்கள் கட்டியிருந்த கூட்டில் துளை செய்து தேனையெல்லாம் வீணாக்கி ஓட விட்டது!
பொன்:- இவ்வளவுதானா?
மரு:- ஒருநாளும் இல்லை. அதுவே பின் மாமரத்திலுள்ள வடுக்களையெல்லாம் உதிரச் செய்து, வாழையின் மடலை அழித்து....
பொன்:- அப்புறம் என்ன ஆயிற்று? ஏன் தயங்குகிறாய்?
மரு:- ஒன்றுமில்லை. உள்ளே கல்லிருக்கும் பலாப் பழத்திற்குள் புகுந்து கல்லோடு கல்லாய்த் தங்கிவிட்டது... தங்கி விட்டது.. தங்கிவிட்டது!
பொன்:- பலாப்பழத்திற்குள் தங்கிவிட்டதா? யானை என்ன ஆயிற்று?
மரு:- (மருள மருள விழித்து) யானையா?... ஏது யானை?
பொன்:- என்னடி கதையா சொல்லுகிறாய், கதை! பாடப் போகிறோம் என்றாய்; இடையே கதையில் வந்து தூங்குகிறாய்!
மரு:- ஆம், அம்மா! மறந்துவிட்டேன். பலாச் சுளைக்குள் என் மனமும் பறிபோய்விட்டது. இப்போது அந்தச் சிறிய மலையை எறிந்தவனுடைய பெரிய மலையைப் பற்றிப் பாடுவோமா?
பொன் :- உன் மனசு.