யாழ் நங்கை
அகக் காட்சி - 2
-
(நடுக் காட்சி பாடுகிறார்கள்)
315
பொன்:- மலைவாணர் பொய்த்தால் மலைபொய்க்கும்; வான்பொய்க்கும்; மலையருவி தானும் பொய்க்கும் என்பார் களேடி! இப்போது மலையருவி பொழிகின்றதேடி, மலையருவி பொழிகின்றதே!
மரு:- மலைவாணர் பொய்யர் ஆவாரோ அம்மா! மலைவாணர் பொய்யர் ஆவாரோ?
அஞ்சாதே; பெண்ணே, இனி நீ என் பொறுப்பு என்று கூறிய மலைவாணர் பொய்யர் ஆவாரோ அம்மா!
வெண்ணிலாவில் வெப்பந் தோன்றினாலும் தோன்றலாம்
மலைவாணர் பொய்க்க மாட்டாரே யம்மா!
பொன்:- அடி, என் முன் கை வளைகள் எல்லாம் கழன்று கழன்று விழுகின்றனவே! இக்கொடுமை செய்தவர்தானேடி அவர்? மலைவாணர் கொடுமை செய்தால் மழை பொய்யாது என்பார்களே!
இப்போது மழை பெய்கிறதேடி, மழை பெய்கிறதே!
வளைநெகிழச் செய்த அக்கொடியார்க்குரிய மலையிலே மழை பெய்கிறதேடி!
மரு: அப்படியானால் வராதிருக்க மாட்டாரம்மா, வராதிருக்க மாட்டார்!
நம்மிடம் அன்பாதரவு காட்டிய அருளுடைய மலைநாடன் வராதிருக்கமாட்டார் அம்மா!
தண்ணீரில் மிதக்கும் குவளை வெப்பத்தால் வெந்தாலும்
வேகலாம்;
அவர் வராது உங்களைக் கொடுமைக் குள்ளாக்குவார் என்று என்னால் நம்ப முடியாது, அம்மா!
பொன்:- ஏடி, நீ என்ன சொன்னாலும் எனக்கு ஆறவில்லையடி!
அவர் வந்து என்னை அணைக்காததனால்,