பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

அப்பாத்துரையம் - 28

வேள்வி பற்றியோ, சடங்கு பற்றியோ பேசப்பட்டால் உடனே அது சமண நூலன்று என்ற முடிவுக்குச் சில ஆராய்ச்சியாளர் தாவிவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக ஓர் அரசன் முடியேற்கும் போது திருமுழுக்குவிழா(பட்டாபிஷேகம்) நடத்தினான் என்று கூறப்பட்டால், உடனே அரசன் சமணன் அல்லன் என்று கொள்கின்றனர். இது முற்றிலும் தவறு.

சமணமுனிவர்கள் ஒறுத்த வேள்வியும் சடங்கும் உயிர்க்கொலையுடனிணைந்த வேள்வியும் சடங்குமேயன்றி எல்லா வேள்விகளும் சடங்குமல்ல. ஏனெனில் இன்றளவுங் கூட சமணரிடையே இல்லறத்தாருக்கு வகுக்கப்பட்ட எல்லா நடைமுறைகளும் பிறந்த நாள் விழா, பூணூல் அணிவித்தல் (உபநயனம்) மணவிழா முதலிய எல்லாச்சடங்குகளும் பிறரிடம் காணப்படும் முறையிலேயே நடத்தப்பெறுகின்றன. வைதிக (இந்து)அறநூல்களில் கூறப்பட்ட பதினாறு நற்செயல்களுமே (சம்ஸ்காரங்கள்) சமணர்களாலும் பின்பற்றப்படுகின்றன. இதுமட்டுமன்று, இச் சமயங்களில் அவர்கள் வழங்கும் மந்திரங்கள் கூட வேதமந்திரங்களே. மந்திர வழிபாட்டுக்குரிய தெய்வங்களும் இந்திரன், வருணன், அக்கினி, வாயு, உருத்திரன் முதலிய வேதத் தெய்வங்களே. எனவே, சமணநெறி வேள்விகளுக்கும் சடங்குகளுக்கும் முற்றிலும் எதிரானதல்ல. ஆனால் சமணசமயம், அவை இல்லறத்தாருக்குமட்டுமே உரியவை என்று கொண்டது. அவர்களுக்கும் கொல்லாமையுடன் கூடிய வினைகள் மட்டுமே உரியவை. வேத வேள்வியாளர் செய்யும் உயிர்க்கொலைக்கு மாற்றாக அவர்கள் சோறும் நெய்யும் படைப்பர்.

சமணர் வாழ்வியல் ஒழுக்கமுறை

சமண ஒழுக்கமுறை, இல்லற ஒழுங்கு (சிராவகதர்மம்) துறவற ஒழுங்கு (யதிதர்மம்) என இருபாலாக வழங்குகிறது. இரண்டும் கொல்லாமையையும், வாய்மை, அவாவின்மை, கற்புநெறி, தன்னல மறுப்பு (அஹிம்சை, சத்தியம், ஆஸ்தேயம், பிரமசரியம், பரிமித பரிக்கிரகம்) ஆகியவற்றையும், அடிப் படையாகக் கொண்டவை. இரண்டினிடையேயும் உள்ள வேற்றுமை அளவையும் கண்டிப்பையும் பொறுத்தவை. துறவிகள் வகையில் அவை மயிரிழையும் பிறழாது மேற்கொள்ளப்பட