பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

அப்பாத்துரையம் - 28

வேள்வியில் ‘அஜம்' படைக்கப்பட வேண்டும் என்பதற்கு, முளை தவிர்ந்த நெல்மணி எனப்பொருள் கொள்ளாது, ஆடு எனக்கொண்டு, பின்னர் மாடு குதிரை முதலியவற்றையும் வேள்வியின் பேரால் கொல்லத் தொடங்கிய பின், சமணர் அக்கொலை வேள்விகளையும் வேதத்தையும் மறுத்தனர். வேத சமய நீங்கலான பிற பல சமயத்தார்களும், ஒவ்வொரு வகையில் வேதத்தை மறுக்கவே செய்தனராயினும், சமணரளவு கொல்லா நெறியைப் பேணிக் காக்கவில்லை.

2. புத்த சமயம்

நீலகேசி, புத்தசமய நூலாகிய குண்டலகேசியை மறுக்கவே எழுந்ததாயிருக்க வேண்டுமாதலால், அதன் கண்டனங்களுள் புத்தசமயக் கண்டனமே முதலிடம் பெற் றிருக்கிறது.குண்டலகேசி வாதம், அர்க்கசந்திர வாதம், மொக்கல வாதம், புத்தவாதம் என்ற நான்கு பிரிவுகளால் இச்சமயக் கருத்துக்கள் விளக்கப்பட்டுக் கண்டிக்கப்படுகின்றன. இவற்றுள் முதல் இரண்டும் நான்காவதுமாகிய மூன்றிலும் பெரும்பாலும் புத்தசமய ஆராய்ச்சியே நிறைந்திருக்கின்றன. மூன்றாவதாகிய மெக்கலவாதத்தில் மொக்கலன் மூலமாகச் சமண சமயத்தைக் கண்டித்துக் குண்டலகேசி நிகழ்த்திய வாதப் பொருளை எதிர்த்து, நீலகேசி விடையளிக்கிறாள். எனவே, இப்பகுதிதான் நேரடியாகக் குண்டலகேசிக்கு மறுப்புக்கூறும் பகுதியாயிருத்தல் வேண்டும்.குண்டலகேசி பெரும்பகுதியும் நமக்குக் கிட்டாமற் போகவே, அதன் போக்கை உய்த்தறிவதும் பெரும்பாலும் இப்பிரிவினால் மட்டுமே கூடும்.

குண்டலகேசி வாதத்தில் குண்டலகேசி புத்த சமயத் தின் அடிப்படைக் கெள்கைகளை நான்காக வகுக்கிறாள். அவை முதல்வர் (ஆப்தர்) வாய்மொழி (ஆகமம்) பொருண்மை (பதார்த்தம்) செயல் (பிரவிருத்தி) ஆகியவை. முதல்வராகிய புத்தர், காலத் தொடக்கமுதல் என்றுமிருப்பவர்; எல்லாம் வல்லவர்; இருவினையகன்றும் உயிர்கள் நலனை எண்ணி உலக வாழ்வில் பேரூழி பேரூழிதோறும் (கற்பகற்பந்தோறும்) ஊடாடுபவர். அறநெறி உரைத்து அதனை ஏற்றொர்க் கெல்லாம் வீடுபேறு அளிப்பவர்.