பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

53

நீலகேசி: மயிற்பீலிக்காக மயிலைக் கொல்வதில்லை. கொல்லத்தூண்டுவதுமில்லை. பீலியைக் கொல்லாமைக்குக் கருவியாகவே பயன்படுத்துகின்றனர். தமக்காக மயிலைக் கொல்வது கேட்டால், துறவியர் அதனை ஏற்கார் என்பதும் உறுதி...

மொக்கலன்: தீவினை தீய செயலால் மட்டுமே வரும். ஊனுண்ணல் நுகர்தலால் செயலன்று.

நீலகேசி: நுகர்தல் செயலன்று என்று கொள்வதானால், கற்பழித்தல் முதலியவையும் நுகர்ச்சியேயாதலால் தீமை யன்றாய்விடும். பிற பல தீமைகளும் அவ்வாறே.

ஊனுண்ணல் மறைமுகக் கொலையன்று என்று நாட்ட மொக்கலன் கூறும் பல்வகை எதிர் உரைகளையும் நீலகேசி எளிதில் மறுத்தாள்.

மொக்கலன்: துன்பத்தை வரவேற்கும் தவத்தை மேற் கொள்ளும் நீங்கள், உயிருடன் உடலை எரித்தல் போன்ற வற்றையும் தவத்திற்கொப்பான செயலாகக் கொள்ளலாம் அன்றோ?

நீலகேசி: பிற உயிர்கட்கு ஊறுசெய்வது மட்டுமன்றித் தனக்கு ஊறு செய்வதும் கொல்லாமைக்கு மாறானதே. சமணர் தவம், பிற உயிர்களுக்கு ஊறு செய்யாத தவம். தனக்கும் ஊறுசெய்வது சமணர் நோக்கமன்று. உடலாற்றலறிந்து படிப்படியாகவே அவர்கள் துன்பத்தை ஏற்பர். மேலும் இம்மறுப்பு புத்தர் வாழ்க்கை வரலாற்றுக்கு மாறானது. புத்தர்பிரான் மேற்கொண்ட நிறைபாடுகள் (பாரமிதைகள்) முற்றிலும் தன்னொறுப்பேயாகும். விசாகையிடம் உணவு ஏற்குமுன், அவரே பல நாள் உண்ணா நோன்பு நோற்றார். இவையனைத்தையும் மறந்து, சமணர் நோன்பை எள்ளுதல் பொருந்தாது.

மொக்கலன்: மரவகைகள், உயிர் இனங்களுட்பட்ட வையே என நீங்கள் கொள்கிறீர்கள். மரங்கள் வளர்வதால் உயிரினமானால், வளர்கின்ற காரணத்தால் புற்றும் உயிருடைய தாக வேண்டும். உணர்ச்சியற்ற மயிரும் நகமும் போல்வன கூட வளர்கின்றனவே?