பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

அப்பாத்துரையம் - 28

தொகை என்பது அறிவால் அறியப்படும் பண்புகளின் பொதுத்தன்மையன்றித் தனியாய் இருப்பதன்று. எல்லாப் பொருள்களிலுமே வேறுவேறு பொதுப்பண்புகள் இருக் கின்றனவாதலால், எல்லாம் தொகைகளாதல் வேண்டும். தொகை வகைகள் ஓர் உறவேயன்றி வேறன்று. ஒரு முறையில் தொகையாவது இன் னாருமுறையில் வகையாகும்.

லோகஜிதன்: பண்புகளில் கூடுதல் முறைகள் உண்டு. தித்திப்புப் பொருள்களில் மிகுதித் தித்திப்பும், குறைந்த தித்திப்பும் அறியப்படுகின்றன. தொகை அவ்வாறு அறியப்படாது.

நீலகேசி: பொதுப் பண்புகளினால் ஏற்படும் தொகுதியே தொகையாதலால், அதிலும் கூடுதல் குறைகள் உண்டு. எடுத்துக்காட்டாகக் குதிரை என்ற தொகையில் பொதுப் பண்புகளின் உயர்வு தாழ்வுகளால் உயர்வகைக் குதிரை, தாழ்ந்தவகைக் குதிரை என்ற படிப்படியான வேறுபாடு காணலாம். தொகை, வகை ஆகியவை பண்புகளின் பொதுமை, வேறுபாடுகளேயன்றி வேறல்ல. தனிப்பொருள்களாயின், எல்லாப் பொருள்களும் எல்லாப் பண்புகளுடனும் சேர இடந்தரவேண்டும். வெண்கொக்குப்போல் கருங்கொக்கும், பறக்கும் பறவைபோல் பறக்கும் விலங்கும் இருத்தல் கூடியதாக வேண்டும்.

கோப்பு நிலையுடைய (சத்) அன்று என்று நீங்களே ஒப்புக்கொள்வதால், அதுவும் தனிப்பொருளன்று.

லோகஜிதன்: பொருள் ஒருமை உடையது, நிலை யாயானது. பண்புகள் பன்மை வாய்ந்தவை. நிலையற்றவை. இரண்டும் ஒன்றாதல் பொருந்தாது. பொருள் பண்பாயின் பண்புகள் ஒன்றாகும். பண்புபோல் பொருளும் அழியும்.

நீலகேசி: பண்பு பொருள் என்று நான் கூறவில்லை. பொருள் சார்ந்தது. பல பண்புகள் ஒரு பொருள் சார்ந்து ஒரே நேரத்திலும் அறியப்படலாம். பாற்கட்டி என்ற ஒரே பொருள், வெண்மையாகவும் பெரிதாகவும் தித்திப்பாகவும் இருக்கலாம். ஒவ்வொரு நேரம் ஒரு பண்பு பிரித்தறியப்படும். ஆகவே, பன்மைவாய்ந்த பண்புகளும், நிலையற்ற பண்புகளும், ஒரு நிலையான பொருளைச் சார்ந்து அறியப்படுதல் பொருந்துவதே யாகும்.